வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (14:15 IST)

கலாபவன் மணி மரணத்திற்கு காரணம் என்ன?: பிரேத பரிசோதனையில் தகவல்

மலையாளம் மற்றும் தமிழ் நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு, கல்லீரல் பிரச்சனை மற்றும் அவரின் மதுப்பழக்கமுமே காரணம் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.


 

 
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. தமிழில் ஜெமினி படத்தின் மூல அறிமுகம் ஆன இவர் பல படங்களில் நடித்துள்ளார். கல்லீரல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த கலாபவன் மணி, சனிக்கிழமையன்று தன்னுடைய பண்ணை வீட்டில் இருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.
 
இதையடுத்து அவர் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்தார். கலாபவன் மணி உடலில் மெத்தனால் என்ற நச்சுப் பொருள் கலந்திருந்ததாக மருத்துவ வட்டாரங்களில் கூறப்பட்டது.
 
இந்நிலையில் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
அதுஒரு புறம் இருக்க, அவரின் பிரேத பரிசோதனையின் அறிக்கை தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர் உடலில் விஷப் பொருட்கள் எதுவும் இல்லை எனவும், கல்லீரல் பிரச்சனை முற்றி அவர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
 
சமீபகாலமாக அவர் கல்லீரல் பிரச்சனை பெரிதாகி, ஏறக்குறைய செயல் இழக்கும் நிலைக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அதனால், அவரை மது அருந்த கூடாது என்றும், மீறி அருந்தினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் எனவும் மருத்துவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். அதுவே அவரது உயிரை குடித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
 
மருத்துவர்கள் கூற்றுப்படி கலாபவனின் மரணம் இயற்கையானதுதான் என்ற முடிவுக்கு போலீசார் வந்தாலும், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள அவரின் உடல் உள் உறுப்புகள் பற்றிய அறிக்கை வந்த பின்னரே இறுதி முடிவுக்கு வர முடியும் என்று தெரிகிறது.