வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (12:17 IST)

நித்யானந்தா ஆண்மைப் பரிசோதனைக்குத் தயங்குவது ஏன்?: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

ஆண்மைப் பரிசோதனைக்குத் தயங்குவது ஏன் என்று நித்யானந்தாவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது முன்னாள் பெண் சீடரான ஆர்த்திராவ் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில், அவர் மீது பிடதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

ஆனால் அதற்குப்பின் அவர் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து ராம்நகர் மாவட்ட செசன்சு நீதிமன்றம் நித்யானந்தா மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்தது.

இந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆகஸ்ட்டு 6 ஆம் தேதி ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா உட்படவேண்டும், மறுநாள் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறியது.

நித்யானந்தா சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆகஸ்ட்டு 5 ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆண்மை பரிசோதனைக்கு இடைக்கால தடை விதித்து, 18 ஆம் தேதி ராமநகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி நித்யானந்தா ராமநகர் கோர்ட்டில் ஆஜரானார். இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்ஜனா பிரகாஷ் தேசாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது.

நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதிடுகையில், ”இந்த சம்பவம் குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது நித்யானந்தாவுக்கு அவருடைய தரப்பு வாதங்களை முன்வைக்க உரிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

அந்த விசாரணை மிகவும் அவசர அவசரமாக நடத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, நித்யானந்தாவுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் பெங்களூர் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு நிரந்தரமாகத் தடைவிதிக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்நிலையில், நடிகை ரஞ்சிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “இந்த வழக்கினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவர். என்னை தொடர்புபடுத்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய காட்சிகள் அனைத்தும் செயற்கையாகப் புனையப்பட்டவை.

அந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். என் மீதும், நித்யானந்தா மீதும் வீண் பழி சுமத்தப்பட்டது. என்னையும் இந்த வழக்கு தொடர்பான மனுதாரர்களில் ஒருவராக சேர்த்துக்கொள்ள வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான நீதிபதி எம்.என்.ராவ், வாதாடுகையில், “நித்யானந்தா தரப்பில் வைக்கப்படும் வாதங்களுக்கு முகாந்திரம் ஏதுமில்லை. எந்த உண்மையும் கிடையாது. நீதிமன்றத்தையும், விசாரணைகளையும் தவிர்க்கும் வகையிலேயே நித்யானந்தா தொடர்ந்து செயல்படுகிறார்.

அவர் மீது தவறு இல்லை என்றால் ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்கலாமே. எதற்காக புதிய மனுக்களைத் தாக்கல் செய்து வழக்கை திசை திருப்ப வேண்டும்“ என்று கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள், ‘நாளுக்கு நாள் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற ஆண்மை பரிசோதனைகள் அவசியமான ஒன்று. யாரும் இது போன்ற பரிசோதனையைத் தவிர்க்கக் கூடாது.

இந்தப் பரிசோதனையைக் கண்டு பயப்படுவது ஏன்? நீங்கள் பரிசோதனைக்கு மறுப்பதால் உங்களைப் பற்றி பல்வேறு வகையான ஊகங்கள் வெளிவரக்கூடும்‘ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.