பாகிஸ்தானில் சிறைச்சாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய தலிபான்கள் , அங்கிருந்த பயங்கரவாதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கைதிகளை தப்பிக்க வைத்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் அரசுக்கு எதிராக கடந்த சில வருடங்களாக போராடி வரும் தலிபான்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பன்னு நகரில் பக்துன்ஹவா என்ற சிறைச்சாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.இவர்களில் பயங்கரவாதிகளும் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை இச் சிறைச்சாலையை 150-க்கும் மேற்பட்ட தலிபான்கள் பயங்கர ஆயுதங்களுடனும்,கையெறி குண்டுகளுடனும் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலைத்தொடர்ந்து சிறையில் 380-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிவிட்டனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதிகள் எனவும் ஷபியாக்கான் என்ற சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே தலிபான்களின் செய்தி தொடர்பாளர் அஸிமுல்லா மெசூத் கூறுகையில், எங்கள் இயக்கத்தைச்சேர்ந்த 1200 பேரை விடுவித்துள்ளோம் என்றார்.