வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2017 (16:04 IST)

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி : ராம்மோகன் ராவுக்கு தொடர்பு?

இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதற்கா பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவுக்கு தொடர்பிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.


 

 
டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இன்று அதிகாலை 3 மணி அளவில், சதீஷ் சந்திரா என்ற நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இரட்டை இலை சின்னத்தை தினகரன் தரப்பிற்கு பெற்றுத்தரும் இடைத்தரகராக அவர் செயல்பட்டதாகவும், அதற்காக ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டு ரூ.1.30 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரை கைது செய்த போது அவரிடத்தில் ரூ. 60 லட்சம் பணத்தை டெல்லி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
ஆனால், இதுபற்றி கருத்து தெரிவித்த தினகரன், இதில் தனக்கு தொடர்பில்லை எனவும், சதீஷ் சந்திரா என்ற நபர் யாரென்றே தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சியை சீர்குலைக்க சிலர் திட்டமிட்டு இப்படி செய்துள்ளனர் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பற்றி விசாரணை செய்ய, ஏசிபி சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீசார் நாளை சென்னை வருகின்றனர். அவர்கள் தினகரனிடம் விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த விவகாரத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற விசாரணையில் டெல்லி போலீசார் இறங்கியுள்ளனர். இதில், தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததாகவும், இது கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. 
 
ஏற்கனவே, ஊழல் புகாரில் வருமான வரித்துறையினரின் சோதனையை சந்தித்து, தனது பதவியை பறிகொடுத்தவர் ராம் மோகன் ராவ். அவருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குனர் பதவியை தமிழக அரசு சமீபத்தில் அளித்தது. இந்நிலையில்தான் இரட்டை இலை விவகாரத்தில் இவரின் பெயர் அடிபடுகிறது. இதனால் டெல்லி போலீசாரின் விசாரணை வளையத்தில் இவர் சிக்குவார் எனத் தெரிகிறது.