வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (10:42 IST)

உலக சினிமா - In the Heart of the Sea

உலக சினிமா - In the Heart of the Sea

ஹெர்மன் மெல்வில்லி என்ற அமெரிக்க நாவலாசிரியர் 1851 -இல் எழுதி வெளியிட்ட 'மோபி டிக்' நாவலை அடிப்படையாக வைத்து, இன் த ஹார்ட் ஆஃப் த ஸீ திரைப்படம் எடுக்கப்பட்டது.


 


1820 -இல் அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து ஹெர்மன் இந்த நாவலை எழுதினார்.
 
1820 -களில் திமிங்கல எண்ணெய் வர்த்தகம் பணம் கொழிக்கும் வியாபாரமாக இருந்தது. திமிங்கலத்தின் தலைப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணைக்காக திமிங்கல வேட்டை நடத்தப்படும். அதில் தலைசிறந்தவரான ஓவன் சேஸ் முதலாளிகள் சிலரால் எக்ஸஸ் என்ற கப்பலின் முதல்நிலை பணியாளராக நியமிக்கப்படுகிறார். சேஸ் எதிர்பார்ப்பது கேப்டன் பதவி. ஆனால், அதிகாரமிக்க ஒரு பிரபு குடும்பத்தின் வாரிசு - அனுபவமில்லாத ஜார்ஜ் பொலார்ட் கேப்டனாக நியமிக்கப்படுகிறார். கப்பல் புறப்படுகிறது. அதில் 14 வயதே நிரம்பிய தாமஸ் நிக்கர்சன் என்ற சிறுவனும் இருக்கிறான்.
 
இந்த திமிங்கல வேட்டை பயணம் பல மாதங்கள் நடக்கிறது. சேஸ் வெற்றிகரமாக ஒரு திமிங்கலத்தை பிடிக்கிறார். அதன் பிறகு திமிங்கலமே கிடைக்கவில்லை. கடைசியில் ஈக்வேடர் நாட்டிலுள்ள ஒரு துறைமுகத்துக்கு வருகிறார்கள். அங்கிருந்து 2,000 மைல்கள் தொலைவில் திமிங்கலங்கள் ஏராளமாக இருப்பதாகவும், ஆனால் ஒரு ராட்சஸ் வெள்ளை திமிங்கலம் அவர்களின் கப்பலை மூழ்கடித்ததோடு ஆறு பேரை கொன்று விட்டதாகவும் அங்கிருக்கும் கேப்டன் ஒருவர் தகவல் சொல்கிறார்.  கப்பல் அவர் சொன்ன இடத்துக்கு செல்கிறது. திமிங்கலங்களின் கூட்டத்தை அவர்கள் கண்டடைகிறார்கள்.
 
ஈக்வேடர் கேப்டன் எச்சரித்தது போலவே 100 அடிக்கு மேலிருக்கும் ராட்சஸ திமிங்கலம் ஒன்று அவர்களின் கப்பலை மோதி மூழ்கடிக்கிறது. பலர் இறந்து போகிறார்கள். மூன்று உயிர் காக்கும் படகில் மீதமுள்ளவர்கள் தப்பிக்கிறார்கள். அந்த ராட்சஸ திமிங்கலம் தொடர்ந்து வந்து ஒரு படகை தாக்கி மூழ்கடிக்கிறது. இந்த பெரும் பிரச்சனையிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பது மீதி கதை.
 
14 வயது சிறுவனான தாமஸ் நிக்கர்சனும், சேஸும், கேப்டனும் வேறு சிலரும் மட்டுமே திமிங்கல தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைக்கிறார்கள். 95 நாள்கள் அவர்கள் கடலில் உணவின்றி பயணம் செய்ய நேர்கிறது. 
 
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகு நாவலாசிரியர் ஹெர்மன் தாமஸ் நிக்கர்சனை தேடி வருகிறார். இப்போது நிக்கர்சன் வயதான மனிதர். குற்றவுணர்வில் அவர் யாருடனும் பேசாமல் கிட்டத்தட்ட ஒருதலைமறைவு வாழ்க்கையை மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். முதலில் எதையும் கூற மறுக்கும் அவர் மனைவியின் வற்புறுத்துதலால் கதையை சொல்லத் தொடங்குகிறார். அவர் சொல்லச் சொல்ல கதை காட்சிகளாக விரிகிறது. 
 
நீண்ட 95 நாள் பயணத்தில் அவர்கள் தங்களுடன் இருந்தவர்களையே சாப்பிட நேர்கிறது. தப்பிப் பிழைத்தவர்கள் தங்களுக்குள் ஒருவரை தேர்வு செய்து அவரை கொன்று சாப்பிட வேண்டிய நிலை வருகிறது. தாமஸின் குற்றவுணர்வுக்கு இதுவே காரணமாக அமைகிறது.
 
காட்சிரீதியான அனுபவத்தை தாண்டி சில உணர்வுபூர்வமான சம்பவங்களும் படத்தில் உண்டு. ராட்சஸ திமிங்கலம் கடைசியாக அவர்களின் படகை தாக்கி அழிக்க வருகையில் சேஸ் அதனை கொல்ல தயாராகிறார். அப்போது அது ஏற்கனவே சேஸ் காயப்படுத்திய தனது உடல் பகுதியை அவர் பார்க்கும்படி காட்டுகிறது. அது இன்னும் ஆறாத பெரும் புண்ணாக இருக்கிறது. அதனைப் பார்க்கும் சேஸ் அதன் மீது தாக்குதல் நடத்தாமல் விட்டு விடுகிறார். திமிங்கலமும் படகை தாக்காமல் தன் வழியே செல்கிறது. அதன் பிறகு அந்த திமிங்கலம் அவர்கள் வழியில் எதிர்படுவதேயில்லை.
 
ஏ பியூட்டிஃபுல் மைண்ட், அப்போலோ 13, த டாவின்சி கோட் போன்ற முக்கியமான படங்களை இயக்கிய ரான் ஹாவர்ட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 
 
இன்னும் சிறப்பான உணர்வுபூர்வமான படமாக இது இருந்திருக்கலாம்.