வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2016 (16:56 IST)

என்னை `இளையராஜா' என்று ஏற்றுக்கொள்ளவில்லை - இளையராஜா

பேண்டும், சட்டையும் கிராப்புமாய் இருந்தவனை `இளையராஜா' என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அன்னக்கிளிப் பிறகான அனுபவத்தை இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.
 

 
1976 -அன்னக்கிளி' இசைத்தட்டு வெளிவந்து சக்கைபோடு போட்டது.
 
'அன்னக்கிளி ஒன்னைத்தேடுது', 'மச்சானைப் பார்த்தீங்களா', 'நம்ம வீட்டுக் கல்யாணம்' முதலான பாட்டுகள் ரேடியோவில் மாறி மாறி ஒலித்தன.
 
'அன்னக்கிளி' 200 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. அன்னக்கிளி இசைத்தட்டுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. கடைகளில் முன்பதிவு செய்து, இசைத்தட்டை வாங்கினார்கள்.
 
அப்போது டெலிவிஷன் கிடையாது. ரேடியோ தான். அந்த சமயம் அன்னக்கிளி பாடலை ரேடியோவில் ஒலிபரப்பினால் ஒரு வீட்டில் பாடலை வைப்பார்கள்.
 
அது அடுத்த வீடு, அடுத்த வீடு என்று தொடர்ந்து தெரு முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.
 
இதை நான் மலயப்பநாயகன் தெருவில் வாக்கிங் செல்லும் போது பார்த்திருக்கிறேன். அதுவும் 6 மாதங்களுக்கு மேலாக நானே நேரடியாக கண்டு இருக்கிறேன்.
 
அன்னக்கிளிக்கு நான்தான் இசை அமைத்தேன் என்பது இரண்டு மூன்று வீடுகளைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.
 
மக்கள் அந்த பாடல்களை கேட்க, கேட்க `எந்த பாடல் நன்றாக இருந்தாலும் அதை ரசிப்பார்கள்' என்று எண்ணினேனே தவிர, கர்வப்படவில்லை. சந்தோஷப்பட்டேன்.
 

 
போடிநாயக்கனூரில் ஒரு கச்சேரிக்கு சென்றிருந்தோம். அப்போது நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பு என்னைப்பார்க்க அதிகமான கூட்டம். கூட்டம் கலைய வேண்டும் என்றால் நான் வந்து எனது முகத்தை காட்ட வேண்டும் என்று கூறினார்கள்.
 
நானும் கூட்டத்தினர் முன்பு வந்து நின்றேன். ஆனால் கூட்டத்தினரோ எனக்கு பின்னால் பார்த்துக்கொண்டு இருந்தனர். `என்னங்க! இன்னமும் இளையராஜாவை காணோம்' என்று ஒருவர் கேட்டார்.
 
என் அருகில் இருந்தவர், `இதோ இவர்தான்!' என்று என்னை சுட்டிக்காட்டினார்.
 
உடனே கூட்டத்தினர் கையை முகவாய்கட்டையில் வைத்து, 'ஹூம்... இந்த பையன்தானா!' என்று உற்சாகம் குறைந்தவர்களாக, காற்றுப்போன பலூன் மாதிரி ஆனார்கள்.
 
பெயருக்கு ஏற்றபடி ஒரு பெரிய அழகான வாலிபனாக எதிர்பார்த்தவர்களுக்கு, சின்னப்பையனாய்... பேண்டும், சட்டையும் கிராப்புமாய் இருந்தவனை `இளையராஜா' என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அதனால்தான் அவர்களுக்கு இவ்வளவு ஏமாற்றம்!'
 
நன்றி : ராஜா ரசிகன்