வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 23 மார்ச் 2016 (15:38 IST)

இது வெறும் விமர்சனம் அல்ல... இளையாராஜா ரசிகனின் ஏக்கம்....

‘இசைஞானி’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இளையராஜா திரையுலகத்தில் 1000 படங்களுக்கு இசையமைத்ததை முன்னிட்டு விஜய் டிவி ‘இளையராஜா 1000’ என்ற நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியது.
 

 
அந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் அந்த நிகழ்ச்சியைத்தான் ஞாயிற்றுக்கிழமை மதியம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
நிகழ்ச்சி கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளரான திவ்யதர்ஷினி, பேசிப் பேசியே ரசிகர்களின் பொறுமையை சோதித்தார் என கமெண்ட்டுகள் வந்தன.
 
அதை கவனமாகப் பரிசீலித்த விஜய் டிவி நிர்வாகம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி பேசியதில் ‘ஸ்பான்சர்களின் அறிவிப்புக்காக’ மட்டுமே அவரது பேச்சைப் பயன்படுத்தியது.
 
பாடகர் மனோவை வைத்து தனியாக சில தொகுப்புரரையை எடுத்து அதை நிகழ்ச்சியில் சேர்த்திருந்தனர்.
 
எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டும் ஐந்தாறு பாடல்களை சிறப்பாகப் பாடாமல் போயிருந்தால் ‘இளையராஜா 1000’ நிகழ்ச்சி ‘அய்யகோ’ என்று புலம்ப வைத்திருக்கும்.
 

 
அதிலும் ‘இளைய நிலா பொழிகிறது...’ பாடலில் புல்லாங்குழலை மாற்றியதால் வாசிக்க முடியாமல் போன நவீனை பாடி முடிந்ததும், மீண்டும் அந்த புல்லாங்குழலை வாசிக்கச் செய்து அந்த இசையைக் கேட்ட போது, புல்லரித்துப் போனது நிஜம்.
 
இளையராஜாவின் இசையால் மட்டுமே நடிகர்களாக அங்கீகரிக்கப்பட்ட மோகன், ராமராஜன் போன்றவர்களை நிகழ்ச்சிக்கு வரவழைத்திருக்கலாம்.
 
நாயகிகளில் கூட ராதா, கௌதமி, பூர்ணிமா பாக்யராஜ், பானுப்ரியா, மீனா என சிலர் மட்டுமே வந்திருந்தது வருத்தமடைய வைத்தது.
 
இளையராஜாவின் இசையில் இனிமையான பாடல்களைக் கொடுத்த கவிஞர்களையும், பாடலாசிரியர்களையும் மேடையேற்றியிருக்கலாம். ஒருவேளை அவர்கள் யாரையும் அழைக்கவில்லையோ.
 
பாடகர்களில் கூட பி. சுசீலா, ஜென்சி, உமா ரமணன், சித்ரா, ஷைலஜா ஆகியோர் வந்திருந்தாலும், சித்ரா மட்டுமே ஓரிரு பாடல்களைப் பாடினார். ஜானகி போன்றோர் இந்த நிகழ்வுக்குக் கண்டிப்பாக வந்திருக்க வேண்டும்.
 
இளையராஜாவின் முதல் படமான ‘அன்னக்கிளி’ படத்தில் இருந்தும், ஆயிரமாவது படமான ‘தாரை தப்பட்டை’ படத்திலிருந்தும் ஒரு பாடல் கூட பாடப்படாதது ஏமாற்றமே.
 
இயக்குனர்களில் கூட சிலர் மட்டுமே வந்திருந்தனர். இளையராஜாவின் இனிமையான பாடல்களாலும், பின்னணி இசையாலும் தங்களையும் வெற்றி இயக்குனர்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்ட இயக்குனர்கள் பலர் வராதது கவனத்தில் கொள்ள வேண்டியது.
 
கமல்ஹாசன், வெங்கடேஷ் தவிர வேறு எந்த முன்னணி நடிகர்களும் வராதது ஏன்? பிரகாஷ்ராஜ் மட்டுமே ஒவ்வொரு பாடல் பாடும் போதும் தன்னை ஒரு இளையராஜாவின் தீவிரமான ரசிகர் என்பதை உணர்த்திக் கொண்டிருந்தார்.
 
அஜித் மனைவி ஷாலினி ஒரு ரசிகையாக அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார்.
 
தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் தனது இசையைப் பேச வைத்த ஒரு மகானுக்கு இப்படி ஒரு அரைகுறையான பாராட்டு விழாவை நடத்த எப்படி தோன்றியது.
 
ஒரு இளையராஜாவின் தீவிரமான ரசிகரிடம் கேட்டால் கூட அவர் அற்புதமான பாடல்களைத் தேர்வு செய்து கொடுத்திருப்பார்.
 
நிகழ்ச்சியை உருவாக்கியவர்களில் ஒருவர் கூட இளையராஜாவின் தீவிரமான ரசிகர் இல்லை என்பது மட்டும் புரிந்தது.
 
மீண்டும் ஒரு பாராட்டு விழா நடத்த விரும்பினால் உலகின் பல மூலைகளில் பரவிக் கிடக்கம் ராஜாவின் கோடானு கோடி ரசிகர்களின் கருத்துக்களைக் கேளுங்கள்.
 
அப்போதுதான், இளையராஜாவின் இசையைப் போலவே அந்த நிகழ்வும் இனிமையாக அமையும்.

நன்றி : பால க்ருஷணன்