வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:05 IST)

நள்ளிரவிலும் பாதுகாப்பாக உணர்ந்தேன் - சென்னைவாசிகளை நினைத்து உருகும் ஹன்சிகா

சென்னையில் கொட்டித் தீர்த்த மழையில் சென்னைவாசிகள் மட்டும் அவதிப்படவில்லை. ஹன்சிகாவையும் காய விட்டுள்ளது மழை.


 
 
எப்படி என்பதை அவரே தனது ட்விட்டர் செய்தியில் விலாவரியாக குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த 24–ந்தேதி இரவு 8 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். அப்போது கொட்டித் தீர்த்த மழையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இரவு 8.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் ஓட்டலுக்கு புறப்பட்டேன். கார் மெதுவாக நகர்ந்தது.
 
இதனால் காரில் இருந்தபடியே எனக்குப் பிடித்த டி.வி. தொடர்களை செல்போனில் பார்த்தேன். இரவு 11.30 ஆன போதும் எனது கார் விமான நிலைய ரோட்டிலேயே நின்றது. அந்த அளவு போக்குவரத்து நெருக்கடி.
 
எனக்கு பிடித்தமான சினிமாவை பார்க்கத் தொடங்கினேன். கார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட செல்லவில்லை. நேரம் நள்ளிரவை கடந்து விட்டது. காரிலேயே இருந்ததால் கால்கள் வலிக்கத் தொடங்கின. இனியும் காத்திருக்க விரும்பாத நான், காரில் இருந்து இறங்கி அருகில் உள்ள ஓட்டலை தேடி மழையில் நனைத்தபடியே ரோட்டில் நடந்து சென்றேன்.
 
என் உடல் சேறும் சகதியுமாக ஆகி விட்டது. அதை கண்டு கொள்ளாமல் ஓட்டலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். மழையால் சாலைகள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கிய நிலையிலும், சென்னை மக்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டனர்.
 
சிலர் என்னை பெயர் சொல்லி அழைத்தார்கள். என் நிலைமையை புரிந்து கொண்டு நான் ஓட்டலுக்கு செல்ல எனக்கு வழிகாட்டி உதவி செய்தனர். அந்த நள்ளிரவிலும் நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன். இரவு 1 மணிக்கு ஓட்டலுக்கு சென்று படுக்கையில் படுத்தேன்.
 
சென்னை எனது வீடு என்பது இதன் மூலம் உறுதியாகி விட்டது. என்னை தங்களில் ஒருத்தியாக நினைத்து மக்கள் என்மீது காட்டிய அன்பையும், பாசத்தையும் பார்த்து நெகிழ்ந்து விட்டேன். நகரமே வெள்ளத்தில் தவித்தாலும் பிறருக்கு உதவி செய்யும் மனதை அறிந்தேன்.
 
எனக்கு சென்னை மக்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற நேரங்களில் நானும் அவர்களுக்காக இருக்கிறேன். தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அன்பும், பிரார்த்தனையும் என்று கூறியுள்ளார்.