வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Updated : சனி, 2 ஜூலை 2016 (13:06 IST)

ராம் கோபால் வர்மா என்னை ஏமாற்றினார் - முத்துலட்சுமி பேட்டி

ராம் கோபால் வர்மா என்னை ஏமாற்றினார் - முத்துலட்சுமி பேட்டி

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதை மையமாக வைத்து ராம் கோபால் வர்மா இயக்கிய கில்லிங் வீரப்பன் வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரில் நேற்று தமிழில் வெளியானது.


 


இந்தப் படத்தை தமிழக மக்கள் பார்க்க வேண்டாம் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு...
 
ஏன் இந்தப் படத்தை எதிர்க்கிறீர்கள்?
 
இந்தப் படத்தில் வரும் கதைகள் முற்றிலும் பொய்யானவை. என்னைப் பற்றியும், என் கணவர் பற்றியும் தவறாக சித்தரித்துள்ளனர். தமிழக மக்கள் யாரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம். உங்கள் நேரத்தையும், பணத்தையும் இந்தப் படத்திற்காக வீணாக்காதீர்கள்.
 
இந்தப் படம் பொய் என்றால் உண்மை என்ன?
 
என் கணவர் குறித்த உண்மைகளை நானே விரைவில் படமாக எடுக்கப் போகிறேன். அவரது சின்ன வயது முதல் எந்த சூழல் அவரை சந்தன மரங்கள் கடத்த வைத்தது முதல் அனைத்து விஷயங்களையும் அதில் சொல்லவிருக்கிறேன். அப்போது பல உண்மைகள் அதில் தெரிய வரும்.
 
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், உங்கள் கணவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுவது...?
 
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், என் கணவருக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இருந்ததில்லை.
 
உங்களிடம் அனுமதி பெற்று படத்தை எடுத்ததாக வர்மா கூறியுள்ளாரே?
 
என் கணவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போவதாக வர்மா என்னிடம் சொன்னார். நான் அவரிடம், என் கணவரை தவறாக சித்தரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன். அவரும் உண்மை சம்பவத்தை படமாக எடுக்கிறேன் என்றார். அதனால் இந்தி ரைட்ஸ் மட்டும் கொடுத்தேன். அவர் என்னை ஏமாற்றி பிற மொழிகளிலும் படம் இயக்க கையெழுத்து வாங்கினார். அவரை நான் ரொம்பவும் மதித்தேன், மரியாதை வைத்திருந்தேன். அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.
 
வழக்கு தொடர்ந்திருக்கிறீர்களே...?
 
அவர் மீது கர்நாடகாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வழக்கு போடுவேன்.
 
படத்தில் வரும் சம்பவங்களை அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் எழுதியதை அடிப்படையாக வைத்து எடுத்ததாக வர்மா கூறியுள்ளாரே?
 
முன்னாள் போலீஸ் அதிகாரி தேவாரம் பல ஆண்டுகள் என் கணவரை தேடினார். அவர் புத்தகம் எழுதினால் அதில் அர்த்தம் உண்டு. ஆனால், விஜயகுமாருக்கு என்ன தெரியும்?
 
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதாக காட்டியிருப்பது...?
 
அவரை மோரில் விஷம் வைத்து கொன்றுள்ளனர். அந்த உண்மையை விஜயகுமார் சொல்ல தயாரா? அவர் தவறான தகவல் கொடுத்து வருகிறார்.