வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Cauveri Manickam
Last Updated : வியாழன், 1 ஜூன் 2017 (18:31 IST)

ஹீரோயினுடன் ரொமான்ஸோ, டூயட்டோ இல்லை” – ‘போங்கு’ நட்ராஜ்

பாலிவுட்டின் பிரபல கேமராமேன், கோலிவுட் கொண்டாடும் ஹீரோ என ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருகிறார் நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியம். அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘போங்கு’ படம், நாளை ரிலீஸாகிறது. ‘வெப்துனியா’ வாசகர்களுக்காக அவர் அளித்த சிறப்புப் பேட்டி இது.


 

 
‘போங்கு’ படத்தின் கதை என்ன?
 
ஒரே சீராகப் போய்க் கொண்டிருக்கிற வாழ்க்கையில், திடீரென ஒரு சம்பவம் நிகழ்ந்து நம்முடைய பாதை மாறும். பாதை மாறினாலும், நாம மாறக்கூடாதுனு சொல்ற விஷயம்தான் ‘போங்கு’. வெளியூரில் இருந்து கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர்களுக்கு, ‘உங்க புரொஃபைல் நல்லாருக்கு. ஆனா, உங்களை பிளாக் லிஸ்ட்ல வச்சிருக்காங்க’ என்ற பதில் கிடைக்கிறது.
 
தினசரி இதே பதிலைக் கேட்டு சோர்ந்துபோய் வரும் இளைஞர்களிடம், கூட இருக்கும் ஒருவர், ‘தினமும் இப்படி மூஞ்சைத் தொங்கப்போட்டு வர்றீங்களே… உங்களை ஒரு இடத்துக்கு அழைச்சிகிட்டுப் போறேன்’ என்று சொல்லி கூட்டிகிட்டுப் போவார்.
 
அந்த இடம், கார்களைத் திருடி விற்கிற இடம். ‘படித்தவர்களுக்கு இந்த வேலை சரிப்படாது’ என்று சொல்லி, அங்கும் அவர்களுக்கு வேலை கிடைக்காது. கடுப்பான அவர்கள், ஒரு காரைத் திருடுகின்றனர். அவர்கள் ஏன் காரைத் திருடுகிறார்கள்? திருடியபின் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
 
ஹீரோயின் ரூகி சிங் பற்றி சொல்லுங்க…
 
பல அழகிப் போட்டிகள்ல கலந்து கொண்டவங்க ரூகி சிங். ஹிந்திப் படங்கள்ல நடிச்சவங்களுக்கு, இதுதான் முதல் தமிழ்ப் படம். தமிழ் சினிமாவுல உள்ள ஆர்வத்தால், துடிப்போட இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க.
 
உங்க ரெண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி எந்த அளவுக்கு இருக்கும்?
 
படத்துல நாங்க ரெண்டு பேருமே ஃபிரண்ட்ஸாத்தான் இருப்போம். மத்த படங்கள் மாதிரி ரொமான்ஸ் லுக் விட்டுக்கிறது, ஃபாரீனில் டூயட் சாங்குக்கு ஆடுவது மாதிரியான எந்த வழக்கமான விஷயங்களும் கிடையாது. அவங்களும் ஃபிரண்ட்ஸ் குரூப்புக்கு உள்ளத்தான் இருப்பாங்க. நண்பர்களுக்குள்ள இருக்குற அண்டர்ஸ்டாண்டிங் மாதிரித்தான். ஹீரோ செய்ற எல்லா விஷயத்துலயும், அவங்களும் ஒரு பகுதியா இருப்பாங்க.
 
போஸ்டர்ஸ் பார்க்கும்போது ‘சதுரங்க வேட்டை’ சாயல் தெரியுதே…
 
இரண்டுமே திருட்டு சம்பந்தப்பட்ட விஷயம்தான். ஆனால், அதன் கதைக்களம் வேறு, இதன் கதைக்களம் வேறு.
 
இந்தப் படத்துல ரோல்ஸ் ராய்ஸ் கார் முக்கியப்பங்கு வகித்திருப்பதாகக் கேள்விப்பட்டோமே…
 
இந்தப் படத்தோட ஹீரோவே அந்தக் கார் தான். ஒரு நாளைக்கு 4 லட்ச ரூபாய் வாடகை பேசி, 40 நாட்களுக்கு ஷூட் பண்ணோம். அதுமட்டுமல்ல, ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஜாகுவார்னு ஏகப்பட்ட கார்கள் இந்தப் படத்துல முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன.
 
நிவின் பாலியுடன் ‘ரிச்சி’ படத்தில் நடித்த அனுபவம்?
 
ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸ். இண்ட்ரஸ்டிங்கான கதைக்களம் அது. தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில்தான் கதை நிகழும். செல்வா என்ற போட் மெக்கானிக்கா நடிச்சிருக்கேன். இப்போதைக்கு இவ்வளவு சொல்ல மட்டும்தான் எனக்கு அனுமதி கொடுத்திருக்காங்க.
 
நடிக்க ஆரம்பித்த பிறகு, ஒளிப்பதிவு பண்ற படங்களின் எண்ணிக்கை குறைந்தது போலத் தெரிகிறதே..?
 
நான் வருடத்திற்கு ஒரு படம்தான் ஒளிப்பதிவு பண்றேன். ஒரு லெவலுக்குப் பிறகு மக்களுக்கான படங்களா பண்ணணும். வதவதன்னு படங்களை ஒத்துக்கிட்டா, ஒரு நல்ல படத்துல ஒர்க் பண்ண முடியாம போயிடுது. நட்புக்காக சில படங்களை ஒத்துக்கிட்டா, அந்த நேரத்துல வர்ற நல்ல படங்களை இழக்க நேரிடுது. எனவே, நடிப்பதிலும் சரி, ஒளிப்பதிவும் சரி… செலக்டிவாத்தான் பண்றேன்.
 
தமிழ்ல மட்டுமே நடிக்கிற உங்களை, பாலிவுட் ஹீரோவா எப்போ பார்க்கலாம்?
 
தென்னிந்திய மொழிகள் எதுவா இருந்தாலும் நடிச்சிடலாம், ஒரு பிரச்னையும் கிடையாது. ஆனா, ஹிந்திக்கு நம்ம முகம் செட் ஆகாது. தென்னிந்தியாவுல இருந்து டெல்லிக்கோ, மும்பைக்கோ போன ஒருத்தன் மாதிரியான கதைகள் வந்தா பண்ணலாம். பாலிவுட்ல நடிக்கிறதுக்கு, பஞ்சாபி மாதிரியான முக அமைப்பு வேணும்.
 
இதற்கு முன் வெளியான ‘எங்கிட்ட மோதாதே’, விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றும், கலெக்‌ஷன் குறைந்தது ஏன்?
 
அந்த மாதத்தில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகின. அதனால், போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதற்கடுத்த வாரம் ‘டோரா’, ‘கவண்’ என பெரிய படங்கள் ரிலீஸானதால், தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனாலும், போட்ட பணத்தை எடுத்துவிட்டது ஈராஸ் நிறுவனம். தயாரிப்பாளர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ அதனால் பாதிப்பில்லை.
 
 
                                                                                                                          -- சி. காவேரி மாணிக்கம்