வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (17:06 IST)

ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்றே நடிக்கிறேன் - தமன்னா பேட்டி

தமன்னாவின் மார்க்கெட் க்ராஃப் எகிறியிருக்கிறது. கமர்ஷியல் படங்களில் தமன்னாவைப் போல் வெற்றிக் கொடிகட்டும் நடிகைகள் விரைவில் கலைப்படம், விருது என்று அலைபாய்வது சாதாரணம். தமன்னா எப்படி? அவரே சொல்கிறார்.


 
 
எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை...?
 
நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வப்படுகிறேன். கதையம்சம் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படங்கள்.
 
விருது வாங்க வேண்டும் என்ற விருப்பம் இல்லையா?
 
எனக்கு விருதுகள் மீது ஆசை இல்லை. விருது படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் கிடையாது. 
 
எதனால்...?
 
வசூல் இல்லாமல் தோல்வி அடையும் படத்தில் நடித்து விருது பெறுவதில் எந்த பயனும் இல்லை. படங்கள் நன்றாக ஓடி வெற்றி பெற வேண்டும். அதுவே விருது பெற்றதற்கு சமமானதாக இருக்கும்.
 
இப்படியொரு முடிவுக்கு வர என்ன காரணம்?
 
நான் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும். நன்றாக ஓடி எல்லோருக்கும் லாபம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் நடிக்கிறேன்.
 
அந்த எதிர்பார்ப்பு நிறைவேறி வருகிறதா?
 
சமீபத்தில் நான் நடித்து திரைக்கு வந்த அனைத்து படங்களிலும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. பாகுபலி இரண்டாம் பாகத்திலும் சிறப்பாக நடித்து இருக்கிறேன்.
 
தமிழ், தெலுங்கு அளவுக்கு இந்தி உங்களுக்கு கைகொடுக்கவில்லையே?
 
இந்தியில் எனக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்று சொல்வது தவறு. நான் நடித்த பாகுபலி படம் இந்தியில் வசூல் சாதனை நிகழ்த்தியது.
 
வெற்றி பெற்ற நடிகையாக இருந்தும் அடிக்கடி படங்களில் பார்க்க முடிவதில்லையே?
 
குறைவான எண்ணிக்கையில் படங்களில் நடிப்பதால் அப்படி கூறுகிறார்கள். நான் நடிக்கும் பல படங்கள் இரண்டு மூன்று மொழிகளில் தயாராகிறது. அதனால்தான் ஒவ்வொரு படத்துக்கும் அதிக இடைவெளி ஏற்படுகிறது.
 
இந்திப்பட வாய்ப்பு அதிகம் வந்தால் தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை தவிர்ப்பீர்களா?
 
அப்படி செய்ய மாட்டேன். தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.