வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (16:06 IST)

மறக்க முடியுமா பஞ்சு அருணாசலம் என்ற பண்பாளரை...

பஞ்சு அருணாசலத்தின் மறைவு தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பாகும். பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல்துறை வித்தகரான அவர் எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரும் போற்றும் பண்பாளராகவும் இருந்தார். சினிமா உலகம் போன்ற பகட்டான உலகில் பஞ்சு அருணாசலம் போன்ற பண்பாளர்கள் தோன்றுவதும், திரையுலகில் ஆளுமை செலுத்துவதும் அரிது. 


 

 
காரைக்குடியில் உள்ள சிறுகூடல்பட்டி பஞ்சு அருணாசலத்தின் சொந்த ஊர். கவியரசு கண்ணதாசன் இவரது சித்தப்பா. கண்ணதாசனின் உதவியாளராக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் பஞ்சு அருணாசலம். விரைவிலேயே அவர் திரைப்படங்களுக்க பாடல்கள் எழுத ஆரம்பித்தார். கலங்கரை விளக்கம் படத்தில் அவர் எழுதிய, பொன்னெழில் பூத்தது புதுவாழ்வில்... பாடல், அது வெளியான காலத்தில், கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் என்றே பலரும் நினைத்தனர். வார்த்தை வளமும், மொழியின் செழுமையும் ஒன்றாக கலந்த அற்புதமான பாடல் அது.
 
பஞ்சு அருணாசலம் இயற்றிய அனைத்துப் பாடல்களுமே சிறப்பானவை, கண்ணியம்மிக்கவை. காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்... என்ற தம்பிக்கு எந்த ஊரு பாடலாகட்டும், கண்மணியே காதல் என்பது கற்பனையோ.. என்ற ஆறிலிருந்து அறுபதுவரை பாடலாகட்டும், அனைத்துமே என்றும் நிலைத்து நிற்கும் அழுத்தமான உணர்ச்சியும் வார்த்தை பிரயோகமும் கொண்டவை.
 
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1974 வெளிவந்த, எங்கம்மா சபதம் படத்துக்கு பஞ்சு அருணாசலம் வசனம் எழுதினார். தொடர்ந்து மயங்குகிறhள் ஒரு மாது, அவன்தான் மனிதன், துணிவே துணை, அன்னக்கிளி, புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா, கவரிமான், கல்யாணராமன், முரட்டுக்காளை, மீண்டும் கோகிலா, தூங்காதே தம்பி துhங்காதே, அடுத்த வாரிசு, தம்பிக்கு எந்த ஊரு என்று தொடர்ச்சியாக பல படங்களுக்கு வசனம் எழுதினார். அவரது வசனத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த ரஜினி, கமல் படங்கள் அனேகம். முக்கியமாக ரஜினியின் ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, தர்மதுரை, வீரா படங்களுக்கு அவர் வசனம் எழுதினார். 
 
1976 -இல் அவர் அன்னக்கிளி படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தார். இளையராஜாவை அந்தப் படத்தில் பஞ்சு அருணாசலம் அறிமுகப்படுத்தினார். அதுவரை இந்திப் பாடல்களில் காதுகளை வைத்திருந்த தமிழகம் தமிழ்ப் படல்களை கேட்க ஆரம்பித்தது.
 
பஞ்சு அருணாசலத்தின் அனைத்து வெற்றிகளுக்குப் பின்னாலும் இருந்தது, அவரது நிதானமும், மனிதர்களை அவர் புரிந்து கொண்ட விதமும். இளையராஜாவிடம் இருந்த இசை அறிவை உணர்ந்து கொண்டதால்தான் பலரது எதிர்ப்பையும் மீறி அன்னக்கிளியில் அவரை இசையமைப்பாளராக்கினார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் தந்தார். அவரை மட்டுமின்றி அவரது இரு மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா இருவரையும் தான் தயாரித்த படங்களில் இசையமைப்பாளர்களாக அறிமுகப்படுத்தினார்.
 
ரஜினி, கமல் என்ற இரு ஜாம்பவான்களின் வெற்றிக்குப் பின்னால் பஞ்சு அருணாசலம் என்ற மனிதர் இருக்கிறார். எப்போதும் போல சத்தமில்லாத ஆளுமையாக அவர் இருந்து கொண்டேயிருக்கிறார். ப்ரியா, ஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோ கேட்ட குரல், குரு சிஷ்யன் போன்ற ரஜினியின் பெயர் சொல்லும் படங்கள் பலவற்றை தயாரித்தவர் பஞ்சு அருணாசலம். அதேபோல் கமல் நடித்த கல்யாணராமன் உள்பட பல படங்கள். இவ்விரு நடிகர்களின் அதிக படங்களை தயாரித்தவர் பஞ்சு அருணாசலம் என்பது முக்கியமானது.
 
இயக்குனராக பஞ்சு அருணாசலம் சோபிக்கவில்லை. எழுத்துதான் அவரது வலிமையாக இருந்தது. அது பாடலாவும், வசனமாகவும் வெளிப்பட்டபோது வெற்றி அவரை தேடி வந்தது. இப்போதும் இளையராஜா இசையில் ஒரு படத்துக்கு வசனம் எழுத ஒப்புக் கொண்டிருந்தார். வாழ்நாள் முழுவதும் எழுதி வந்த அந்த திரைப்பட மேதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
 
திறமையும், பணிவும் ஒரேயிடத்தில் இருப்பது அரிது. அந்த இரண்டும் கலந்த அற்புத மனிதர் திறமையாளர் பஞ்சு அருணாசலம்.
 
அவருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகள்.