வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (10:28 IST)

ரஜினி தவறாக வழிநடத்தப்படுகிறார் - திருப்பூர் சுப்பிரமணியம் தாக்கு

கபாலி முதல் சி 3 வரை அனைத்து படங்களுமே நஷ்டம். நாலு நாளில், ஆறு நாளில் 100 கோடி என்று விளம்பரப்படுத்துவதெல்லாம் மக்களை ஏமாற்றும் பொய்கள் என்ற விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்தின் புகார் திரையுலகில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தனது நெடும் பேச்சுக்குப் பிறகும் திருப்பூரார் சும்மாயில்லை. முன்னணி நடிகர்களையும் அவர்கள் படங்களையும் குறிவைத்து விளாசுகிறார். குறிப்பாக ரஜினியையும், கபாலியையும்.
 
கபாலி, தொடரி, கொடி, காஷ்மோரா, போகன், பைரவா, சி 3 அனைத்துமே முன்னணி நடிகர்களின் படங்கள். இவற்றால் விநியோகஸ்தர்களுக்கு 25 முதல் 50 சதவீதம்வரை நஷ்டம் என்று கூறியுள்ளார்.
 
கபாலி வெளியான போது, ஒரு டிக்கெட்  இரண்டாயிரம் ரூபாய் என்று இமாலய விலைக்கு விற்கப்பட்டதும், ரஜினியின் ஆத்மார்த்த ரசிகர்களே டிக்கெட் கிடைக்காமல் அல்லாடியதும் ஊர் அறிந்த ரகசியம். அப்படிப்பட்ட படமே நஷ்டம் என்றால் வசூலித்த பணமெல்லாம் யார் பாக்கெட்டுக்குப் போனது? ஒன்று திருப்பூர் சுப்பிரமணியம் பொய் சொல்கிறார். அல்லது மொத்த வசூலையும் தயாரிப்பாளர் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
 
சென்னையில் எந்த ஹீரோவின் படமும் 3 வாரங்களுக்கு மேல் தாக்குப்பிடிப்பதில்லை. ஹீரோவை திருப்திப்படுத்த கட்டாயப்படுத்திதான் படத்தை ஓட்டுகிறார்கள். ஹீரோ காலையில் எழுந்து பார்க்கும் போது பைரவா போஸ்டரை பார்க்க வேண்டும். அதற்காகவே 100 நாள்கள் என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். இது ரசிகர்களை ஏமாற்றும் வேலை என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
 
7 முன்னணி நடிகர்களை குறிப்பிட்டாலும் அவரது டார்கெட் கபாலியும், ரஜினியும்.
 
கபாலி ஒரு தோல்விப்படம் என்ற உண்மை ரஜினிக்கு தெரிந்திருந்தால் அவர் ரஞ்சித்துக்கு மீண்டும் கால்ஷீட் தந்திருக்க மாட்டார். ஆனால், தாணு ரஜினியிடம் கபாலி 200 நாள்கள் ஓடியதாகவும், இந்திய சினிமா எதையும்விட கபாலி அதிகம் வசூலித்ததாகவும் சொல்லி வைத்திருக்கிறார். ரஜினி இப்போது தங்கக் கூண்டில் அடைபட்ட கிளியைப் போல் இருக்கிறார். எங்களில் யாரும் அவரை நெருங்கி உண்மையை சொல்ல முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
 
விநியோகஸ்தர்கள்சங்கம் எந்த நடிகரின் படத்துக்கும் தடை விதிக்கவில்லை. ஆனால், மேலே குறிப்பிட்ட 7 நடிகர்களின் படங்களையும் யாரும் வாங்கப் போவதில்லை. அந்த ஹீரோக்கள் தங்களுடைய படத்தை சொந்தமாக வெளியிடும் போதுதான் அவர்களின் உண்மையான மார்க்கெட் நிலவரம் அவர்களுக்கு தெரியவரும் என்று கூறியுள்ளார்.
 
திருப்பூர் சுப்பிரமணியத்தின் ஆதங்கம் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால், கபாலி, சி 3 போன்ற படங்களும் நஷ்டத்தை தந்தது என்றால், அதன் அடிப்படை காரணம் என்ன என்பதை ஒரு விநியோகஸ்தராக அவர் சொல்லியிருக்க வேண்டும். அதிலும் கபாலி மிக அதிகம் வசூலித்த படம். அந்தப் படத்தை விநியோகஸ்தர்கள் அதிக விலைக்கு வாங்கியதால் நஷ்டம் ஏறபட்டிருக்கலாம். அந்த தொகை எவ்வளவு என்பதையாவது அவர் குறிப்பிட்டிருக்கலாம்.
 
பிரச்சனையை அணுகும்விதமாக பேசாமல் அவதூறு தொனியில் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியிருப்பது அவரது பேச்சு தனிப்பட்ட தாக்குதலாக இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக திரைத்துறையினர் கருதுகின்றனர்.