வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2017 (09:52 IST)

கடந்தவார படங்களின் வசூல் ஒரு பார்வை

சென்னை பாக்ஸ் ஆபிஸில் சி 3 படத்தின் வேட்டை தொடர்கிறது. சென்ற வாரம் வெளியான படங்கள் தயாரிப்பாளருக்கு லாபத்தை தரவில்லை என்பதுடன் பெரும் நஷ்டத்தை தரக்கூடிய நிலையிலேயே உள்ளன.

 
சென்ற வாரம் காதல் கண்கட்டுதே படம் வெளியானது. இந்தப் படத்துக்கு பத்திரிகைகள் நல்ல விமர்சனத்தை எழுதியுள்ளன. ஆங்கில தினசரியான டைம்ஸ் ஆஃப் இந்தியா ஐந்துக்கு மூன்றரை ஸ்டார்கள் அளித்துள்ளது. சி3 படத்துக்கே மூன்று ஸ்டார்கள்தான் கிடைத்தன. பத்திரிகைகள் பாராட்டினாலும் இந்தப் படத்துக்கு வசூல் இல்லை. முதல் மூன்று தினங்களில் சென்னையில் 1.19 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.
 
சென்றவாரம் வெளியான இன்னொரு திரைப்படம் பகடி ஆட்டம். த்ரில்லர் படமான இதில்ரகுமான் நடித்திருந்தார். துருவங்கள் 
 
பதினாறு வெற்றி பெற்றதால், துருவங்கள் பதினாறு படத்துக்குப் பிறகு ரகுமான் நடித்த படம் என்றே படத்தை விளம்பரப்படுத்தினர். ஆனாலும் ஏமாற்றமே. முதல் மூன்று தினங்களில் இந்தப் படம், 5.40 லட்சங்களையே வசூலித்துள்ளது.
 
சென்ற வாரம் வெளியான என்னோடு விளையாடு பரத் நடித்த படம். அவருடன் கிருமி கதிரும் நடித்திருந்தார். ஆனால், கலெக்ஷன்...? முதல் மூன்று தினங்களில் என்னோடு விளையாடு சென்னையில் 7.16 லட்சங்களை மட்டுமே சொந்தமாக்கியுள்ளது.
 
தமிழ்ப் படங்கள் இப்படி நொண்டியடிக்கையில், ஆங்கிலப் படமான ஜான் விக் 2 முதல் மூன்று தினங்களில் 8.07 லட்சங்களையும், பிருத்விராஜின் மலையாளப் படமான எஸ்ரா முதல் மூன்று தினங்களில் 9.84 லட்சங்களையும், ஆங்கிலப் படமான தி லீகோ பேட்மேன் மூவி 16.98 லட்சங்களையும் வசூலித்துள்ளன. இந்த மூன்று படங்களும் சென்ற வெள்ளிக்கிழமையே வெளியாயின.
 
சென்ற வாரம் வெளியான தமிழ்ப் படங்களில் ரம் படம் மட்டும் முதல் மூன்று தினங்களில் 17 லட்சங்களை வசூலித்து ஓரளவு நம்பிக்கை தருகிறது. ராணா நடித்துள்ள காஸி திரைப்படம் முதல் மூன்று தினங்களில் 18 லட்சங்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 
சூர்யாவின் சி 3 படம் சென்ற வார இறுதியில் 1.13 கோடிகளை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இந்தப் படம் சென்ற ஞாயிறுவரை 4.62 கோடிகளை தனதாக்கியுள்ளது.