வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 21 ஜனவரி 2017 (12:51 IST)

கமல், ரஜினி கலந்து கொண்ட திரைத்துறையினரின் மௌனப் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக்கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று மௌனப்போராட்டம்  நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் கோபமான வேண்டுகோளை அடுத்து, மீடியாக்கள் நடிகர் சங்கத்தின் மௌனப்போராட்டத்தை கவர் செய்ய வேண்டாம் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 
இன்றுகாலை சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர்  கார்த்தி, செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர்களும், நடிகைகளும் குவியத் தொடங்கினர். அதேபோல் பத்திரிகை நிருபர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் நடிகர் சங்க வளாகத்தில் குவிந்தனர். அவர்கள்  வாசல் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, நடிகர் சங்க உறுப்பினர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
 
ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என்ற புரிதலில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்ட த்ரிஷா,  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்காத அஜித் இருவரும் மௌனப்போராட்டத்தில் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு  இருந்தது. இவர்கள் இருவருமே போராட்டத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக அஜித் தனது மனைவி ஷாலினியுடன்  போராட்டத்தில் கலந்து கொண்டார்.
 
இந்தப் போராட்டத்தில் சிவகுமார், கே.பாக்யராஜ், பார்த்திபன், பிரபு, மன்சூரலிகான், சிவகார்த்திகேயன், சந்தானம், சூர்யா, ரமேஷ்  கண்ணா, ஆனந்த்ராஜ், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரன், ரகுமான், பாத்திமா பாபு, கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.
 
ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து பத்து நிமிட மனவுனப் போராட்டம், வீட்டுக்கு வெளியே படுத்துறங்கியது என்று  தனியாவர்த்தனம் காட்டிய சிம்பு நடிகர் சங்கத்தின் மவுனப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
 
முன்னணி நடிகர்களான கமல், ரஜினி ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு தங்களின்  ஆதரவை பதிவு செய்தனர். மௌனப்போராட்டம் என்பதால் யாரும் பேசவில்லை என்பதும், நடிகர்களின் போராட்டம் ஒன்று  மக்கள் மற்றும் ஊடக கவனமில்லாமல் நடந்ததும் இதுவே முதல்முறை.
 
ஒளிமயமான எதிர்காலம்...?