வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 28 ஜனவரி 2017 (10:05 IST)

நடிகைக்கு நாய்க்கடி - தெருநாய் சிநேகிதிகள் கவனத்திற்கு...

ட்ரீம்ஸ், புலன்விசாரணை 2 உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பருல் யாதவ் மும்பையில் தான் வளர்க்கும் நாய்களுடன்  வாக்கிங் சென்ற போது, தெருநாய்கள் கடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இந்த செய்தியை ஊடகங்களில் அனைவரும் பார்த்திருக்கலாம். தெருநாய் சிநேகிதிகளான சில நடிகைகளுக்கு இதுவொரு எச்சரிக்கை  மற்றும் சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு.

 
தெருநாய்களை கொல்வது தவறு என்று நாய் சிநேகிதிகளான நடிகைகளும் சில செலிபிரிட்டிகளும் தொடர்ந்து வலியுறுத்தி  வருகின்றனர். சாதாரண மக்கள் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கின்றனர். இதில் யார்  பக்கம் நியாயம்?
 
தெருநாய்களுக்கு ஆதரவாக பேசும் த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள் யாரும் தெருநாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதில்லை.  அவர்கள் தெருவில் வசிப்பதில்லை, தெருவில் நடப்பதில்லை. தெருநாய்களின் தாக்குதல்வட்டத்துக்கு வெளியேதான் அவர்களின்  உலகம் இயங்குகிறது. ஆனால், சாதாரண ஜனங்கள் அப்படியில்லை. தெருவில் வசிக்கிறார்கள், தெருவில் நடக்கிறார்கள்,  அன்றாடம் தெருவில் இறங்கினால்தான் அவர்களுக்கு வாழ்க்கையே. இரவில் காரில் செல்லும் நடிகைகளுக்கு நடந்து  செல்கிறவர்களின் பிரச்சனைகள் தெரிய நியாயமில்லை.
 
தெருநாய்களின் அச்சுறுத்தலுக்கு வெளியே இயங்கும் நடிகைகளுக்கு தெருநாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்படும்  நடவடிக்கைகளில் கருத்து சொல்ல தார்மீகமாக எந்த உரிமையும் இல்லை. அவர்கள் பருல் யாதவைப் போல் தெருவில் இறங்கி  நடந்தால் தெருநாய்களின் பெருக்கமும், அதனால் ஏற்படும் அச்சுறுத்தலும் என்னவென்று தெரியவரும். பருல் யாதவ் அதனை  முழுமையாக இப்போது அறிந்திருப்பார்.
 
தெருநாய்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சொல்லும் நடிகைகள், செலிபிரிட்டிகள் முதலில்  தெருவில் இறங்கி நடப்பதற்கு முன்வர வேண்டும். இரவு நேரத்தில் தெருநாய்களை நேருக்குநேர் சந்திக்க வேண்டும்.  அப்போதுதான் பொதுஜனத்துக்கு தெருநாய்களால் ஏற்படும் கஷ்டம் என்னவென்பது அவர்களுக்கு தெரியவரும்.
 
பருல் யாதவ் விரைவில் முழுமையாக குணமடைய நம்முடைய வாழ்த்துகள்.