வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 19 நவம்பர் 2016 (13:07 IST)

கடந்த வாரம் படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

சென்னை பாக்ஸ் ஆபிஸில் இந்தி, ஆங்கிலப் படங்களின் ஆதிக்கம் அதிகரித்தபடியே உள்ளது. அவ்வப்போது தெலுங்குப் படங்களும் இதில் சேர்ந்து கொள்கின்றன.

 
சமீபத்தில் வெளியான கொடி, காஷ்மோரா இரண்டும் சுமாராகவே வசூலித்துள்ளன. காஷ்மோராவுக்கு கொடி மேல். காஷ்மோரா தயாரிப்பாளர் நஷ்டப்படவில்லையென்றாலும், அவர் அடுத்தப் படத்தை வெளியிடும் போது, காஷ்மோராவால் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அவருக்கு நெருக்கடி தர வாய்ப்பு உள்ளது. 
 
சென்றவார இறுதியில் இந்திப் படம் ஏ தில் ஹை முஷ்கில் சென்னையில் 1.42 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை சென்னையில் அதன் வசூல், 1.15 கோடி.
 
கார்த்தியின் காஷ்மோரா வசூலிப்பதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டது. சென்ற வார இறுதியில் இந்தப் படம், 4.73 லட்சங்களை மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது. இதுவரை அதன் சென்னை வசூல், 2.88 கோடிகள்.
 
கொடி கடந்த வார இறுதியில் சென்னையில், 5.30 லட்சங்களை வசூலித்துள்ளது. ரெமோவை தாண்ட வேண்டும் என்ற நோக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படம் இதுவரை சென்னையில் 3.50 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. இது ரெமோவின் சென்னை வசூலில் பாதி.
 
சென்ற வாரம் வெளியான மீன் குழம்பும் மண்பானையும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் வெறும் 9.41 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. 
 
ஆங்கிலப் படமான டாக்டர் ஸ்ட்ரேன்ச் இந்த வாரமும் நல்ல வரவை பெற்றுள்ளது. கடந்த வார இறுதியில் இதன் வசூல், 10.20 லட்சங்கள். இதுவரை சென்னையில் 53.30 லட்சங்களை இந்தப் படம் தனதாக்கியுள்ளது.
 
இந்திப் படமான ராக் ஆன் சென்ற வாரம் வெளியானது. சென்னையில் முதல் 3 தினங்களில் இதன் வசூல், 17.33 லட்சங்கள்.
 
அச்சம் என்பது மடமையடா படம்தான் இந்த வார பாக்ஸ் ஆபிஸின் ஹைலைட். கௌதம், சிம்பு, ரஹ்மான் என்ற கூட்டணி பணப் பற்றாக்குறையைத் தாண்டி சென்னையில் ஜெயித்துள்ளது. முதல் மூன்று தினங்களில் இப்படம் சென்னையில் 2.05 கோடிகளை வசூலித்துள்ளது. இது ரெமோவின் மூன்று நாள் ஓபனிங் வசூலைவிட அதிகம். இந்த வசூலை அப்படம் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதுதான் கேள்விக்குறி.