வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2016 (16:11 IST)

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -4 தேர்வு: விண்ணப்பிக்க 6 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு

நேற்று முதலே டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் மெதுவாக இயங்குவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, ஆன்லைனில் விண்ணப்பதாரர்கள் சிரமப்பட்ட நிலையில் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக கால அவகாசத்தை டி.என்.பி.எஸ்.சி. நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 


 
 
இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஆகஸ்ட் 9-இல் வெளியிட்டது. 
 
18 வயது பூர்த்தியந்தவர்கள் தேர்வை எழுதலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், பிற வகுப்பைச் சேர்ந்தோர் 30 வயதுக்குள்ளும் இருந்தால் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று ஆகும். ஆனால், டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் மெதுவாக இயங்குவதால் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்த 16 ஆம் தேதி கடைசி நாளாகும். 
 
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுவரை தேர்வுக்கு ஏற்கனவே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.