வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2016 (16:25 IST)

பள்ளியில் வெடிகுண்டு வெடித்ததாக புரளி; காவல்துறை மறுப்பு

சென்னையில் இன்று பள்ளியில் குண்டுவெடித்ததாக வெளியான தகவலை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன் பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
 

 
கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி ரயில் நிலையத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், டெல்லி - கான்பூர் ரயிலை வெடிகுண்டு வைத்து, தகர்க்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
 
அதேபோல், நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து அம்மூன்று பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இன்றும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னையில் அடையாறு, மயிலாப்பூர் பள்ளிகளூக்கு மிரட்டல் வந்தது.
 
ஒரேநாளில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளும் சீக்கிரமே அவர்களது இல்லத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
 
மேலும், சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வெடித்ததாகவும் புரளிகள் பரவின. இந்த தகவல் வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வெகுவாக பரவியது.
 
இதனால், பெற்றோர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் ஒருவகையான அச்சம் நிலவியது. இதையடுத்து, வெடிகுண்டு புரளி குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
 
அதில், சென்னையில் எந்த ஒரு பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படவில்லை என்றும் பள்ளிகளில் வெடிகுண்டு வந்திருப்பதாக வந்த தகவல்களை நம்பவேண்டாம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.