வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2016 (09:48 IST)

எஸ்.ஆர்.எம். குழுமம் கறுப்புப் பணத்தால் தான் இயங்குகிறது - போட்டு தாக்கும் ராமதாஸ்

எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பேருந்துகள், மருத்துவமனை, ஓட்டல், தொலைக்காட்சி, வார, மாத இதழ்கள் என 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கறுப்புப் பணத்தால்தான் இயங்கி கொண்டிருக்கின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், ”வேந்தர் மூவீஸ் மதன் பற்றி இன்று பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் மருத்துவ இடங்களுக்கு பணம் வாங்கி பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டு அவர் தலைமறைவாகி விட்டார்.
 
இன்று அந்த மாணவர்களின் பெற்றோர்கள் சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எஸ்.ஆர்.எம். பச்சமுத்து 1969இல் பள்ளி ஆசிரியராக இருந்தார். பின்னர் தொடக்கப்பள்ளி தொடங்கிய அவர், 1990ல் பொறியியல் கல்லூரி தொடங்கினார். இந்த வளர்ச்சி நம்பும்படியாக இல்லை.
 
சென்னை, திருச்சி, தில்லி, ஹரியானா, சிக்கிம் போன்ற இடங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கியுள்ளார். 20 ஆண்டுகளில் 30 கல்வி நிறுவனங்களை துவங்கியதற்கு பணம் எங்கிருந்து வருகிறது. கல்வி நிறுவனங்களின் மதிப்பு மட்டும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும்.
 
மேலும் பேருந்துகள், மருத்துவமனை, ஓட்டல், தொலைக்காட்சி, வார, மாத இதழ்கள் என 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அவருக்கு உள்ளன. அவை கறுப்புப் பணத்தால்தான் இயங்கி கொண்டிருக்கின்றன.
 
இந்திய மருத்துவ விதிகளுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.ஆர்.எம். குழுமம் மீது இந்திய மருத்துவ குழு, பல்கலைக்கழக மானியக் குழு விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
 
பல ஏக்கர் ஏரி, புறம்போக்கு இடங்களை வளைத்து போட்டு கல்லூரிகளை தொடங்கியுள்ளார். அது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து எஸ்.ஆர்.எம். குழுமத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.