வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2016 (15:15 IST)

’தவறான புள்ளி விவரம்; தமிழகத்திற்கு போலி கவுரவம்’ - தாக்கும் ராமதாஸ்

மத்திய மின்ஆணையத்திடமும் தவறான புள்ளி விவரங்களை அளித்து ஏமாற்றியிருப்பதன் விளைவு தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ள இந்த போலி கவுரவமாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016-17 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக முன்னேறி விட்டதாகவும், இந்தியாவில் மின்மிகை மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய மின்சார ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடே இல்லை என்று கூறி தமிழக மக்களை இதுவரை ஏமாற்றி வந்த தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது மத்திய மின்ஆணையத்திடமும் தவறான புள்ளி விவரங்களை அளித்து ஏமாற்றியிருப்பதன் விளைவு தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ள இந்த போலி கவுரவமாகும்.
 
தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிவடையும் தருவாயை நெருங்கி விட்ட போதிலும் இன்று வரை மின்வெட்டு முடிவுக்கு வரவில்லை. காற்றாலைகள் மூலம் கணிசமான மின்சாரம் கிடைக்கும் போதே இந்த நிலை என்றால், காற்றாலை மின்சாரம் கிடைக்கவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.
 
இத்தகைய நிலையில் தான் 2016-17 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 10,380 கோடி யூனிட்டுகள் என்றும், அதைவிட அதிகமாக 11,545 கோடி யூனிட்டுகள் மின்னுற்பத்தி செய்யப்படும் என்பதால் 1,165 கோடி யூனிட்டுகள் மின்சாரம் மிகையாக இருக்கும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இந்த தகவலை நம்பித் தான்  தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்றும், மின்மிகை மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய மின்சார ஆணையம் கூறியிருக்கிறது. மேலும், 4 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு இச்சாதனையை படைத்ததாகவும் மின்வாரியம் கூறியிருக்கிறது. ஆனால், உண்மை நிலை இதற்கு மாறாக இருக்கிறது.
 
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட அ.தி.மு.க. அரசால் திட்டமிட்டு, செயல்படுத்தப்பட்டு, உற்பத்தி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை. இன்றைய நிலையில் தமிழகத்தின் மொத்த மின் தேவை சுமார் 15,500 மெகாவாட் ஆகும். இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் அதன் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு சுமார் 4750 மெகாவாட் மட்டுமே.
 
அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்கிறது. இதைத்தவிர மத்தியத் தொகுப்பிலிருந்தும், நெல்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலிருந்தும் 4500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இவைதவிர மீதமுள்ள 5426 மெகாவாட் மின்சாரம் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படுகிறது.
 
ஒரு மாநிலம் அதன் மின்தேவையில் மூன்றில் இரு பங்கை மத்திய அரசிடமிருந்தும், தனியாரிடமிருந்தும் வாங்கும் நிலையில், அம்மாநிலத்தை மின்மிகை மாநிலம் என்று கூறினால்,  மக்களை அரசு எந்த அளவுக்கு முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
 
கடந்த ஐந்தாண்டுகளில் 7485 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தயாரிக்கப்ப்படுவதாக அ.தி.மு.க. அரசு பெருமைப்படுகிறது. ஆனால், அம்மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மின் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. மாறாக முந்தைய அரசு தொடங்கிய மின் திட்டங்கள், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரம், தனியாரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் பெறப்படும் 3065 மெகாவாட் மின்சாரம் ஆகியவற்றிலிருந்து தான் ஜெயலலிதா அரசு பெருமைப்பட்டுக் கொள்ளும் அந்த மின்சாரம் கிடைக்கிறது. அது நிச்சயமாக ஜெயலலிதா அரசின் சாதனை அல்ல.
 
மாறாக, தமிழ்நாட்டை உண்மையாகவே மின்மிகை மாநிலமாக்க ஜெயலலிதா அரசுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அதை அதிமுக அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் எண்ணூரில் 660 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மின்திட்டத்தை செயல்படுத்த மட்டுமே அதிமுக அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது. எண்ணூரில் 1320 மெகாவாட் திறன் கொண்ட சிறப்பு பொருளாதாரத் திட்ட அனல் மின்நிலையம், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் மாற்று அனல் மின்நிலையம், 800 மெகாவாட் வடசென்னை அனல் மின் நிலையம், 1600 மெகாவாட் உப்பூர் அனல் மின்நிலையம், உடன்குடியில் தலா 1320 மெகாவாட் என மொத்தம் 4960 மெகாவாட் திறன் கொண்ட 3 மின் நிலையங்கள், செய்யூர் மற்றும் கடலாடியில் தலா 4,000 மெகாவாட் என மொத்தம் 8000 மெகாவாட் திறன் கொண்ட 2 அதி உயர் அனல் மின் திட்டங்கள் என மொத்தம் 17,340 மெகாவாட் மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இதுதான் அதிமுக அரசின் சாதனை.
 
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட மின் திட்டங்களின் மொத்த அளவு வெறும் 1800 மெகாவாட் மட்டுமே. உண்மையில் அதிமுக அரசுக்கும், திமுக அரசுக்கும் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் இல்லை.அதற்கு காரணம் மின்திட்டங்களை செயல்படுத்துவதை விட தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கினால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று திமுகவும், அதிமுகவும் கருதுவது தான்.
 
தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதில் மட்டும் கடந்த பத்தாண்டுகளில் ரூ.42,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த பணத்தைக் கொண்டே கிட்டத்தட்ட 8000 மெகாவாட் மின்திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும். ஆனால், ஊழல் செய்வதற்காக இரு கட்சிகளும் மின்சார வாரியத்தை திட்டமிட்டு சீரழித்தன.
 
அடுத்து வரும் ஐந்தாண்டுகளிலாவது நிலுவையில் உள்ள 17,340 மெகாவாட் மின்திட்டங்களை விரைந்து செயல்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, விலை கொடுத்து வாங்கப்படும் மின்சாரத்தையெல்லாம் தங்களின் சாதனை என்று பெருமை பேசிக் கொண்டிருந்தால் தமிழகம் மின்மிகை மாநிலம் ஆகாது; மாறாக தமிழ்நாடு மின்சார வாரியம் கடனில் தான் மூழ்கும்” என்று தெரிவித்துள்ளார்.