வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (15:21 IST)

பரபரப்பான சூழலில் நாளை தமிழகம் வருகிறார் ஆளுநர்: அடுத்து என்ன நடக்குமோ? யார் முதல்வரோ?

பரபரப்பான சூழலில் நாளை தமிழகம் வருகிறார் ஆளுநர்: அடுத்து என்ன நடக்குமோ? யார் முதல்வரோ?

தமிழக முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இந்த சூழலில் மீண்டும் மும்பைக்கு சென்ற ஆளுநர் நாளை சென்னை திரும்ப உள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
சில தினங்களுக்கு முன்னர் ஓபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்ததை அடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் மறுநாளே ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தனர். அந்த கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். மேலும் முதல்வர் மீது எம்எல்ஏவாகிய நானும் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர்.
 
மேலும் அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் ஏற்கனவே அளித்த ஆதரவை இந்த கடிதத்தின் மூலம் திரும்ப பெறுகிறேன் என கூறியுள்ளனர். எனவே சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிச்சாமியை மாற்றிவிட்டு புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
 
இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 19 எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கியதால் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகியது. இதனையடுத்து திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆளுநருக்கு கடிதம் எழுதி எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என மேலும் நெருக்கடி கொடுத்தனர்.
 
இந்த சூழலில் நேற்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கொறடா சபாநாயகருக்கு பரிந்துரைத்தார். சபாநாயகரும் எம்எல்ஏக்களுக்கு இது தொடர்பாக பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதானல் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூறி வருகின்றனர். இதன் பின்னணியில் சசிகலாவின் தம்பி திவாகரன் உள்ளார்.
 
இப்படி பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நகர்ந்து வரும் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பாக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் மும்பையிலிருந்து நாளை தமிழகம் வருகிறார். ஆளுநர் வந்தாலே ஏதோ அரசியல் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிடுவாரா? அல்லது கொறடா பரிந்துரைத்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக ஏதாவது முடிவெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.