வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 28 ஜூன் 2017 (16:07 IST)

தினகரன் போட்ட திட்டம் : தகர்த்து எறிந்த எடப்பாடி பழனிச்சாமி

ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்டம் காட்ட திட்டமிட்டிருந்த தினகரனின் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகர்த்து எறிந்துள்ளார்.


 

 
சசிகலா குடும்ப உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் அணி முரண்டு பிடிக்க, அவ்வாறே செய்வதாக எடப்பாடி அணி அறிவித்தது. இது தினகரனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயினும், இரு அணிகளும் ஒன்றிணைய தடையாக இருக்க நான் விரும்பவில்லை. எனவே, கட்சி பணியிலிருந்து நான் விலகிகொள்கிறேன் என தினகரன் கூறினார். அதன் பின் அவர் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அவரை கைது செய்து டெல்லி புழல் சிறையில் அடைத்தனர் டெல்லி போலீசார்.
 
அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வந்த தினகரனுக்கு எடப்பாடி மீது ஏராளமான கோபம் இருந்தது. தனக்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, சிறையில் தன்னை வந்து சந்திக்கவில்லை, தற்போது ஜாமீன் பெற்று வந்தும் கூட தன்னை நேரில் சந்திக்க வரவில்லை. தொலைபேசியில் கூட அழைத்து பேசவில்லை என எடப்பாடி மீது தினகரன் கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது.
 
எனவே, ஜனாதிபதி தேர்தலில் தன்வசம் இருக்கும் 35 ஆதரவு எம்.எல்.ஏக்களின் ஓட்டை பெற, தன்னிடம் பாஜகவும், எடப்பாடி பழனிச்சாமியும் இறங்கி வந்து பேசுவார்கள் என கணக்குப் போட்டார் தினகரன். ஆனால், நடந்ததோ வேறு. தினகரனிடம் பாஜக இறங்கி வரவில்லை. அதேபோல், துணை சபாநாயகர் தம்பிதுரையை பெங்களூர் சிறைக்கு அனுப்பி சசிகலாவை சந்தித்து பேசி, அதிமுக அம்மா அணி ஏன் பாஜகவை ஆதரிக்கிறது என்பதை விளக்கி, அவரின் சம்மதத்தையும் பெற்றார் எடப்பாடி. ஒருபக்கம், ஓ.பி.எஸ் அணியும் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்துவிட்டது. 
 
எனவே, இந்த நிலையில் எதிர்ப்பு காட்டினால், அது தனக்கே சிக்கலை ஏற்படுத்தும் என கருதிய தினகரன், வேறு வழியின்றி, தன்னுடைய ஆதரவாளர்களும் பாஜக வேட்பாளர் ராம்நாத் சிங்கையே ஆதரிப்பார்கள் என அறிவித்திவிட்டார். தன்னுடைய திட்டத்தை தவிடு பொடி ஆக்கியதில், தம்பிதுரைக்கு பெரிய பங்கு இருப்பதை உணர்ந்த தினகரன், எடப்பாடி மற்றும் தம்பிதுரை ஆகியோர் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறாராம்.