வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2017 (13:08 IST)

எடப்பாடி அரசு நீடிக்குமா? - திமுகவின் திட்டம் என்ன?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததற்கு தடை விதிக்காத நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை தற்போது நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.


 

 
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு தடை கிடைத்துவிடும். எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். எனவே, ஆட்சியை எளிதாக கவிழ்த்துவிடலாம் என திமுக திட்டமிட்டிருந்தது. 
 
ஆனால், நீதிமன்றமோ தகுதி நீக்கத்திற்கு எந்த இடைக்காலத் தடையும் விதிக்கவில்லை. எனவே, நடக்கவிருந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் ரத்து செய்து விட்டார். அதேபோல், திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி ஒரு திட்டம் திமுகவிடம் இல்லை எனத் தெரிகிறது. 
 
நீதிமன்ற தீர்ப்புக்கு பின், திமுக தரப்பு வழக்கறிஞர்கள் சிலர் கூறும் போது “ இந்த தீர்ப்பு எடப்பாடி தரப்பினருக்கு சாதகமானது போல் தெரியும். ஆனால், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிடும். எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசு தோல்வியை சந்திப்பது உறுதி. அது வரை பொறுமையை கடைபிடிப்போம்” எனக் கூறியிருக்கிறார்கள். திமுகவின் நிலைப்பாடும் இப்போதைக்கு இதுதான் எனத் தெரிகிறது.


 

 
மேலும், அதற்காக எதுவும் செய்யாமால் சும்மா விட்டுவிடக்கூடாது. எடப்பாடி அரசுக்கு சட்டரீதியான சிக்கல்களுக்கு உள்ளாக்க வேண்டும் என திமுக திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதாவது, கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஒரு வழக்கை திமுக தொடுக்க இருக்கிறது.  அதாவது, அப்போது எடப்பாடி அரசுக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். 
 
தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ள சபாநாயகர் தனபால்,  கொறடா உத்தரவை மீறியதற்காக  ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி ஒரு மனுவை திமுக தாக்கல் செய்ய இருக்கிறதாம்.


 

 
கண்டிப்பாக அதற்கு பதில் மனுவை சபாநாயகர் தாக்கல் செய்ய வேண்டி வரும். அதேபோல், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக தினகரன் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாகவும் சபாநாயகர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் வரும். அப்போது, அவரின் நிலைப்பாடு ஒவ்வொரு விவாகரத்திலும் மாறி மாறி  இருப்பது கண்கூடாக தெரியவரும். மேலும், அதன் மூலம், தமிழக அரசு  மற்றும் சபாநாயகரின் இரட்டை வேடம் நீதிமன்றத்தில் அம்பலமாகும். அதை வைத்து அவர்களை எளிதாக மடக்கி விடலாம் என திமுக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
 
ஆக்டோபர் 4ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் போது திமுக மற்றும் தினகரன் தரப்பு வாதங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தமிழக அரசு மற்றும் சபாநாயகரது வழக்கறிஞர்கள் வாதிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.