வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 18 நவம்பர் 2017 (20:13 IST)

போயஸ் கார்டன் சோதனைக்கு காரணம் என்ன?: முதல்வர் விளக்கம்!

போயஸ் கார்டன் சோதனைக்கு காரணம் என்ன?: முதல்வர் விளக்கம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 21 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று இரவு புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பின்னர் இரண்டு லேப்டப்கள் மற்றும் பெண்ட்ரைவ்களை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது.


 
 
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்திய அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் அனுமதியில்லாமல் போயஸ் கார்டனில் வருமான வரித்துறை நுழைந்திருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் வருமான வரித்துறையினர் சோதனை குறித்து பேசினார். அப்போது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருமான வரித்துறை இல்லை.  வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.
 
மேலும் வரி ஏய்ப்பு செய்தவர்களின் வீடுகளில்தான் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. போயஸ் கார்டன் இல்லத்தில் யாரால் சோதனை நடைபெற்றது என்று உங்களுக்கே தெரியும். ஜெயலலிதாவின் வீட்டில்தான் சோதனை நடைபெற்றது. அவரது அறையில் நடைபெறவில்லை என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.