வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

டெங்கு காய்ச்சலுக்கு மட்டும் பயன்படுகிறதா நிலவேம்பு குடிநீர்?

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சித்த வைத்தியத்தின் மூலம் எளிதில் குணப்​படுத்தலாம் என்கிறார்கள் சித்த  மருத்துவர்கள்.

 
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்கள் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும்  பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சலால் குறையும் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலைச்சாறு, ஆடா தொடை, மணப்பாகு வழங்கப்படுகிறது. இந்த மருந்துகளை தமிழக  அரசே பரிந்துரைத்து வருகிறது.
 
நிலவேம்பு குடிநீர் 
 
நிலவேம்பு குடிநீர் சூரணத்தில் நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சு வேர், சந்தனத்தூள், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு,  மிளகு, பற்பாடகம் என்று ஒன்பது வகையான இயற்கை மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன. இதில் நிலவேம்பு,  விலாமிச்சு வேர், பேய்புடல், மிளகு, பற்​பாடகம் ஆகிய ஐந்து பொருட்களும் உடலின் வெப்பத்தை அகற்றி காய்ச்சலைப் போக்கும்  தன்மை கொண்டவை. 
 
தலைவலி, மூட்டுவலி ஆகியவற்றையும் இவை போக்கிவிடும். நாவறட்சியைத் தடுத்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் வெட்டிவேர் காப்பாற்றும். தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, குடல் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைப் போக்கி புண்  ஏதும் ஏற்படாமல் கோரைக்கிழங்கு தடுக்கும். உடலில் உள்ள அகட்டு வாயுவை அகற்றி வயிறு உப்புசம் ஏற்படாமல் சுக்கு  தடுக்கும். சிறுநீர் எரிச்சலைப் போக்கி அதிக சிறுநீர் எளிதில் வெளியேற சந்தனத்தூள் வழிவகை செய்கிறது. இத்தனை  செயல்களையும் ஒருங்கே கொண்டதுதான் இந்த நிலவேம்பு சூரணம். இது, டெங்குவுக்கு மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல்,  பறவைக் காய்ச்சல் போன்ற எல்லா விஷக் காய்ச்சலுக்கும் ஏற்ற அற்புதமான மருந்து.
 
கொசுவை கட்டுப்படுத்த
 
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை கட்டுப்படுத்தவும் சித்த மருத்துவத்தில் வழி இருக்கிறது. ''காஞ்சாங்கோரை  அல்லது வேப்பிலையை வீட்டின் முன்புறம் மற்றும் கொல்லைப் புற வாசல்களில் தோரணம் போல் தொங்கவிட்டால், அதன் வாசனைக்கு கொசுக்கள் உள்ளே வராது. 
 
அதேபோல, நொச்சி இலை அல்லது காஞ்சாங்கோரை இலையை நிழலில் காயவைத்து நெருப்பில் போட்டு புகை வரவழைத்தால், அந்தப் புகையும் கொசுவை உள்ளே வராமல் விரட்டிவிடும். ஆடாதொடை இலை மற்றும் வேப்பிலையை வெயிலில் காயவைத்து சமஅளவு எடுத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியோடு சிறிதளவு சாணத் தூள் சேர்த்து  அதில் பச்சரிசிக் கஞ்சியை ஊற்றி ஊதுவத்தி போல் உருட்டி வெயிலில் காயவைத்து எடுத்து கொசுவத்தி போல்  பயன்படுத்தினாலும் கொசு வராது'. இவ்வாறு செய்வதன் மூலம் கொசுவை கட்டுபடுத்த முடியும் என்கிறார்கள் சித்த  மருத்துவர்கள்.