வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 1 ஜூலை 2017 (13:35 IST)

இது உண்மையான ஜி.எஸ்.டி-யே அல்ல - முன்னாள் நிதியமைச்சர் பகீர் தகவல்

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரியால் இந்தியாவில் பண வீக்கம் ஏற்படும் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், இதுபற்றி மாநில அரசுகளுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய அரசு உரிய விளக்கத்தை கொடுக்கவில்லை என்பதால், எனவே, எந்தெந்த பொருள்கள் விலை உயரும், எந்தெந்த பொருட்கள் விலை குறையும் என்பது பற்றி பொதுமக்களிடையே குழப்பம் நீடிக்கிறது.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த ப. சிதம்பரம் “2006ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிமுகப்படுத்திய திட்டம்தான் இந்த ஜி.எஸ்.டி. ஆனால், அப்போது இந்த திட்டத்தை பாஜக கடுமையாக எதிர்த்தது. அதனால் அதை நிறைவேற்ற முடியாமல் போனது.
 
இப்போது பாஜக அறிமுகப்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி உண்மையான ஜி.எஸ்.டியே அல்ல. இந்த ஜி.எஸ்.டி. பல்வேறு குழப்பங்களுடன் நடைமுறைக்கு வந்துள்ளது. எந்த வியாபாரி எந்த அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. முக்கியமாக, மின்சாரம், பெட்ரோல் போன்ற பொருட்கள் ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டுவரப்படவில்லை.


 

 
இந்த வரியால் சிறு,குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசு அவர்களுக்கு சரியான விளக்கத்தை கொடுக்கவில்லை. மேலும், அவர்கள் கேட்ட அவகாசத்தையும் கொடுக்கவில்லை. இந்த ஜி.எஸ்.டியால் 80 சதவீத பொருட்களின் விலை உயரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
ஒரு நாடு, ஒரு பொருளாதாரம், ஒரு வரி விதிப்பு என்று கூறிவிட்டு, பழைய வரி முறையும், புதிய வரி முறையும் கலந்துள்ளன. பழைய வரி முறை மாறி, புதிய வரி முறைகள் வந்ததாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் பண விக்கம் ஏற்படும். இதை எப்படி மத்திய அரசு கையாளப்போகிறது எனத் தெரியவில்லை. சமரசம் என்ற பெயரில் கீழ்த்தரமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதை விட மோசமான சரத்து எதுவும் கிடையாது” என அவர் பேசினார்.