வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2017 (12:24 IST)

தினகரனை ஒதுக்கிய அமைச்சர்களின் பின்னால் திவாகரன்?

அதிமுக கட்சியிலிருந்து தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற அதிமுக அமைச்சர்களின் முடிவிற்கு பின்னால் சசிகலாவின் திவாகரன் மும்முரமாக செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்ட போது, தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்து விட்டு சென்றார் சசிகலா. அதன்பின் அதிமுகவின் தலைமையாக செயல்பட்டார் தினகரன். அதன் பின், அவர் முதல்வர் பதவிக்கு வருவார் எனக் கூறப்பட்டது. ஆனால், முதல்வர் ஆகும் விருப்பம் தனக்கு இல்லை என அவர் மறுப்பு தெரிவித்தார்.
 
ஆனால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வந்த போது, அதில் அவரே போட்டியிட்டார். எனவே, அதில் அவர் வெற்றி பெற்றால், அடுத்து அவரின் குறி முதல்வர் பதவிதான் என செய்திகள் வெளியானது.  மேலு, ஓ.பி.எஸ் அணி கொடுத்த குடைச்சலில் இரட்டை இலை சின்னம் அவருக்கு கிடைக்காமல் போனது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் தரப்பு ரூ.89 கோடி அளவிற்கு பணப்பட்டுவடா செய்ததற்கான ஆதாரங்களை வருமான வரித்துறையினர், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றினர். மேலும், இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.50 கோடி பேரம் பேசி, சுகேஷ் சந்தர் என்ற நபரிடம் ரூ. 10 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாக டெல்லி போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
 
எனவே, இதற்கு மேல் விட்டால் அவ்வளவுதான் என்கிற நிலைப்பாட்டிற்கு வந்த அதிமுக முக்கிய அமைச்சர்கள், ஒன்று கூடி விவாதிதனர். மேலும், இரு அணிகளும் ஒன்றாக சேர வேண்டுமானால், சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு விலக்கி வைக்க வேண்டும் என ஓ.பி.எஸ்-சும் நிபந்தனை விதித்தார். எனவே, தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கும் முடிவை எடுத்தனர் அதிமுக அமைச்சர்கள். அதேநேரம், அமைச்சரகளின் முடிவிற்கு எதிராக தினகரன் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ நேற்று இரவே நான் கட்சியிலிருந்து விலகி விட்டேன் எனக் கூறி பின்வாங்கினார். 


 

 
தினகரனை விலக்கி வைப்பது என்ற அமைச்சர்களின் முடிவிற்கு பின்னால், சசிகலாவின் சகோதரர் திவாகரன் இருப்பதாக தெரிகிறது. அதாவது, துணைப் பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்தவருடன், தனது குடும்பத்தினர் எவரும் கட்சியில் தலையிடக் கூடாது என்பதில் தினகரன் தெளிவாக இருந்தார். இது, ஆட்சியிலும், கட்சியிலும் கோலோச்சிய திவாகரனுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, திவாகரனின் மகன் ஜெயானந்த் மற்றும் இளவரசின் மகன் விவேக் ஆகியோர் அவ்வப்போது சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து, குடும்ப உறுப்பினர்களை ஒதுக்கி வைக்கும் தினகரனின் செயல்பற்றி புகார் கூறிவந்தனர். இதனால், தினகரன் மீது சசிகலாவும் அதிருப்தியில் இருந்தார். 
 
எனவே, தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த திவாகரன், சமீபத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு பின்னால் இருந்து, தன்னுடைய ஆதரவு அமைச்சர்கள் மூலம் சாமர்த்தியமாக காய் நகர்த்தி தினகரனை கட்சியிலிருந்து ஒதுங்க வைத்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஆனால், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதுதான் ஓ.பி.எஸ் அணியின் முக்கிய கோரிக்கை. அதை ஏற்றுக் கொண்டதாக அமைச்சர்களும் கூறுகின்றனர் . இந்த நிலையில் கட்சி, ஆட்சி இரண்டிற்கு பின்னும் திவகாரன் செயல்பட்டால் என்னவாகும், இதற்கு எந்த வகையில் எதிர்ப்பு உருவாகும் என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.