வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2015 (14:02 IST)

விவசாயி தற்கொலை பற்றி நடிகர் ஷாருக்கானின் கோபமான ட்விட்டர் பதிவு

டெல்லியில் ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை செய்துக் கொண்ட விவகாரம் தொடர்பாக நடிகர் ஷாருக்கான், ஒருவருக்கு ஒருவர் பழிகூறிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் கோபத்துடன் கூறியுள்ளார்.
 

 
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி நேற்று பொதுக்கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச இருந்தபோது, பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஒரு விவசாயி, திடீரென ஒரு துண்டு காகிதத்தை வீசி விட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். விவசாயிகளின் நிலையை விளக்கும்வகையில் அவர் கோஷங்களை எழுப்பினார். அங்கிருந்த ஒரு வேப்ப மரத்தில் ஏறிய அவர், தனது துண்டின் ஒரு முனையை தனது கழுத்திலும், மற்றொரு முனையை ஒரு மரக்கிளையிலும் கட்டினார்.
 
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், அவரை கீழே இறங்குமாறு கூச்சல் போட்டனர். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த மூத்த தலைவர் குமார் விஸ்வாசும், அவரை கீழே இறங்குமாறு கூறினார். அவரை காப்பாற்றுமாறு போலீசாரிடம் வேண்டினார். இரண்டு தொண்டர்கள், மரத்தில் ஏறி, விவசாயியின் தற்கொலையை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் அவர் தூக்கில் தொங்கி விட்டார். மேலே ஏறிய தொண்டர்கள், முடிச்சை அவிழ்க்க முயன்றபோது, மரக்கிளை முறிந்து விழுந்தது.
 
ஆம் ஆத்மி தொண்டர்கள், அந்த விவசாயியை மீட்டு, டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் விவசாயியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இவ்விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிவருகின்றனர்.
 
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கோபத்தில் ட்விட் செய்து உள்ள பாலிவுட் நாடிகர் ஷாருக்கான்,  விவசாயி தற்கொலை செய்துக் கொண்ட விவகாரம் தொடர்பாக ஒருவருக்கு ஒருவர் பழிகூறிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
 

 
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டு உள்ள ட்விட் செய்தியில், "யாரும் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக தற்கொலை செய்வது கிடையாது. அவர்கள் தங்களது வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்கொலை செய்துக் கொள்கின்றனர். ஒரு நொடி யோசித்து, அவர்களது வேதனையை உணர்ந்து பாருங்கள். அதனை தவிர்த்து ஆதாயம் தேட முயற்சி செய்யாதீர்கள், ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.