வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 24 செப்டம்பர் 2016 (14:21 IST)

ஆண்டவன் கட்டளை- திரைவிமர்சனம்(வீடியோ)

இயக்குனர், மணிகண்டனின் இயக்கத்தில் ஷண்முக சுந்தரம் அவர்களின் ஓளிப்பதிவில், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ரித்திகா சிங், நாசர், பூஜா தேவாரியா, யோகி பாபு, வெங்கடேஷ், சிங்கம் புலி, முத்துராமன், ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ஆண்டவன் கட்டளை.

 
குடும்ப சூழ்நிலையின் காரணமாக விஜய் சேதுபதி லண்டனுக்கு வேலை தேடிச் செல்ல முடிவெடுக்கிறார். இவருடன் நண்பர் யோகி பாபுவும் லண்டனுக்கு செல்ல, இருவரும் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் இருவரும் ஏஜென்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் இருந்தால் விசா எளிதில் கிடைக்கும் என்று ஏஜென்ட் கூறுவதை கேட்டு, இருவரும் தங்களது பாஸ்போர்ட்டில் மனைவி இருப்பதாக கூறி ஒரு பொய்யான பெயரை போடுகிறார்கள்.
 
விஜய் சேதுபதி தனது பாஸ்போர்ட்டில் தனது மனைவி பெயரை கார்மேகக் குழலி என்று குறிப்பிடுகிறார். விசா இண்டர்வியூவில் யோகி பாபுவுக்கு மட்டும் விசா கிடைக்கிறது. விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் விஜய் சேதுபதி, நாசர் வைத்திருக்கும் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்.
 
இந்நிலையில், நாசர் லண்டனில் நாடகம் நடத்த விஜய் சேதுபதி உள்ளிட்ட தனது கலைஞர்களை அழைத்துக் கொண்டு போக முடிவு எடுக்கிறார், அப்போது, அனைவரிடமும் பாஸ்போர்ட்டை தயார் செய்யும்படி கூறுகிறார். அந்த நாடக கம்பெனியில் வேலை செய்யும் பூஜா தேவாரியா, விஜய் சேதுபதியின் பாஸ்போர்ட்டை பார்த்து, அவரது மனைவியை பற்றி கேட்கிறார்.
 
அப்போது விஜய் சேதுபதி, விசா எளிதில் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏஜென்ட் மூலமாக பொய்யான ஒரு தகவலை பாஸ்போர்ட்டில் பதிவு செய்திருப்பதாக கூறுகிறார். அந்த பெயரை எப்படியாவது நீக்கிவிடு என்று விஜய் சேதுபதியிடம் எச்சரிக்கிறார் பூஜா தேவாரியா.
 
விஜய் சேதுபதியும் அந்த பெயரை எப்படி நீக்குவது என்று வக்கீலிடம் சென்று ஆலோசனை கேட்கிறார். வக்கீல் அந்த பெயருடைய பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, அவளை மனைவியாக நடிக்க வைத்து, விவகாரத்து வாங்கிவிட்டால் பாஸ்போர்ட்டில் இருந்து பெயரை நீக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறுகிறார்.
 
இதனால், கார்மேகக் குழலி என்ற பெயர் இருக்கக்கூடிய பெண்ணை தேடி அலைகிறார். அப்போது, டிவியில் ரிப்போர்ட்டராக வேலை செய்யும் ரித்திகா சிங்கின் பெயர் கார்மேக குழலி என்பதை அறிந்து, அவரை விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க வைக்க போராடுகிறார்கள்.
 
இறுதியில் ரித்திகா சிங், விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க சம்மதித்தாரா? விஜய் சேதுபதி தனது குடும்ப கஷ்டத்தை தீர்க்க லண்டன் போனாரா? என்பதே மீதிக்கதை. 
 
மௌன மொழியால் கொந்தளிப்பது, வேதனை, இழப்பு, ஏமாற்றம், நெகிழ்ச்சி என ஒவ்வொரு உணர்விலும் உடல்மொழியிலும் விஜய் சேதுபதி தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது பாணியில், இந்த படத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அழகாய் கவர்கிறார் விஜய் சேதுபதி.
 
நிருபர் கதாபாத்திரத்தில் வரும் ரித்திகா சிங், செய்யாத திருமணத்துக்காக அவர் படும் அவஸ்தைகளை கோபமாகவும், பொறுமை இல்லாமலும் கடுப்பாக வெளிப்படுத்தும் விதமும், விஜய் சேதுபதியிடம் சம்மதம் சொன்ன பிறகு வெட்கமும், காதலும் கலந்து புன்னகைக்கும் விதமும் அவரது நடிப்பை பேசவைக்கிறது.
 
விஜய் சேதுபதியின் நண்பராக வரும் யோகி பாபு வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக நகர்கிறது. நாசர், பூஜா தேவாரியா, வெங்கடேஷ், சிங்கம் புலி, முத்துராமன், சீனு மோகன், ஆர்.என்.ஆர்.மனோகர், ரமேஷ் திலக் நமோ நாராயணா ஆகியோருக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை என்றாலும் தங்களது பங்கை அழகாய் வெளிபடுத்தி உள்ளனர்.
 
கே-யின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. பின்னணி இசையில் தனது முழு பலத்தையும் போட்டு உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகவும், தெளிவாகவும் காட்டியிருக்கிறது.
 
இரண்டாம் பாதியில் சில இடங்களில் கொஞ்சம் தொய்வைக் குறைத்திருக்கலாம். படத்தில், ஆங்காங்கே சின்னச் சின்ன குறைகள் மட்டுமே தென்படுகின்றன.
 
மொத்தத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ சமூக அக்கறையுள்ள, காலத்திற்கு தேவையான அர்த்தமுள்ள படம்.

வீடியோ: