வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 1 அக்டோபர் 2016 (13:11 IST)

எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி - திரைவிமர்சனம் (வீடியோ)

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நீரஜ் பாண்டே இயக்கத்தில், சந்தோஷ் துண்டியயில் ஓளிப்பதிவில், அமல் மாலிக் இசையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், நடிகை கியாரா அத்வானி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி.

 
கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் புகழை மேலும் ஒரு படி உயர்த்தி கொண்டு சென்ற பெருமை கேப்டன் தோனிக்கு உண்டு. அப்படிப்பட்ட தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படமே ‘எம்.எஸ்.தோனி’.
 
ராஞ்சியில் வசிக்கும் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த தோனி, தன் திறமையால் எப்படியெல்லாம் போராட்ட சூழலான வாழ்க்கையில் முன்னேருகிறார் என்பதை கூறும் படமாக இது உள்ளது.
 
இப்படம் தோனியின் பிறப்பில் தொடங்கி, இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்ததோடு முடிகிறது. தோனியின் வாழ்க்கை வரலாறு பெரும்பாலோனருக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும் இந்த படத்தில் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவாரசியமாக்கி இருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே.
 
தோனி கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்திருக்கிறார்  என்பதை விட தோனியாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இவர் செய்கிற ஒவ்வொரு செய்கையும் தோனியை ஒத்துப்போகிறது. குறிப்பாக தோனியின் ஸ்பெஷல் ஹெலிகாப்டர் ஷாட். அதேபோல், செண்டிமென்ட் காட்சிகளில் நம்மையும் கண்கலங்க வைத்திருக்கிறார். 
 
தோனியின் காதல் மனைவி ஷாக்ஷியாக வரும் கயிரா அத்வானி நடிப்பிலும் அழகிலும் அசத்தல். அதேபோல், முதல் காதலி ப்ரியங்காவாக வந்து விபத்தில் மரணமடையும் திஷா பட்டானி, படம் முடிந்து வெளியில் வந்து வெகு நேரமான பின்பும் மனதை விட்டு அகல மறுக்கிறார். 
 
தோனியின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக இருக்கும் தோனியால் இப்படியும் காதல் செய்யமுடியுமா? என்று ஆச்சர்யப்பட வைக்கிறது காதல் காட்சிகள். 
 
தோனியின் அக்காவாக வரும் மாஜி கதாநாயகி பூமிகா சாவ்லா, அப்பா அனுபம் கெர், நண்பர்கள் ஹென்றி தங்கரி, ராஜேஷ் சர்மா உள்ளிட்டோர் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
 
விளையாட்டு தொடர்பான காட்சிகளில், தோனி விளையாடும் அசல் காட்சிகளில் அவருடைய முகத்தில் கதாநாயகன் ராஜ்புத் முகத்தை மார்பிங் செய்திருப்பது சிறப்பு. கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அந்த காட்சிகள் அமைந்துள்ளன. அமல் மாலிக்கின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. சந்தோஷ் துண்டியாயில் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். 
 
படத்தின் நீளம் 3 மணி நேரத்துக்கும் மேலாக இருந்தாலும், படம் போரடிக்காதவாறு இருக்கிறது. படத்தில் எந்தவொரு காட்சியையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இயக்குனரின் கைவண்ணம் கச்சிதமாக அமைந்திருக்கிறது. 
 
மொத்தத்தில் ‘எம்.எஸ்.தோனி’ வாழ்க்கைப்படம் சதம் அடிக்கும் வெற்றிப்படம்.

வீடியோ: