வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2017 (17:40 IST)

விக்ரம் வேதா - சினிமா விமர்சனம்

தமிழில் ரசிகர்களின் புத்திசாலித்தனத்தின் மீது நம்பிக்கை வைத்து எடுக்கப்படும் படங்கள் மிக மிகக் குறைவு. `விக்ரம் - வேதா` அப்படி ஒரு திரைப்படம்.


 

 
படத்தின் தலைப்பு குறிப்பிடுவதைப் போல, விக்ரமாதித்யன் - வேதாளம் கதைதான் படம். விக்ரமாதித்யன் வேதாளத்தை தனது தோளில் சுமந்துகொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு புதிர் கதையைச் சொல்லி, அதற்கான விடையைக் கேட்கும். சரியான பதில் சொன்னவுடன் வேதாளம் பறந்து சென்றுவிடும்.
 
மீண்டும் விக்ரமாதித்யன் வேதாளத்தை துரத்திச் சென்று பிடிப்பான். இது திரும்பத் திரும்ப நிகழும். இந்த பாணியை பின்னணியாக வைத்து, படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் புஷ்கரும் காயத்ரியும்.
 
விக்ரம் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கொடுங்குற்றவாளிகளை சுட்டுத்தள்ளும் ஒரு காவல்துறை அணியில் இருக்கிறார். வேதா என்ற 14 கொலைகளைச் செய்த கேங்ஸ்டரை சுட்டுத்தள்ள முடிவுசெய்கிறது அந்த அணி. இந்த நிலையில் தானே முன்வந்து சரணடையும் வேதா, ஜாமீன் பெற்று வெளியேறுகிறான்.
 
வேதா தானாக முன்வந்து சரணடைந்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலைத் தேட ஆரம்பிக்கிறான் விக்ரம். இப்படி பல முறை விக்ரமின் கையில் சிக்கும் வேதா ஒவ்வொரு முறையும் ஒரு புதிரை முன்வைக்கிறார். அந்தப் புதிருக்கான விடையை அடையும்போது, வேறு ஒரு புதிர்.


 

 
கதை என்று பார்த்தால் ஒரு சாதாரண த்ரில்லர்தான். ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி VS குற்றக்கும்பல் தலைவன் என்று மிகச் சாதாரணமாகத்தான் துவங்குகிறது படம். ஆனால், சற்று அவசரப்படாமல் கவனித்தால் பல ஆச்சரியங்களை ரசிகர்களுக்கு பரிசளிக்கிறது இந்தப் படம். கடைசிக் காட்சி வரைக்கும் இந்த ஆச்சரியத்தைத் தக்கவைத்திருக்கிறார்கள்.
 
படத்தின் துவக்கத்தில் விக்ரம், ஓடாமல் இருக்கும் ஒரு பழைய புல்லட் வாகனத்தை சரி செய்ய ஆரம்பிக்கிறார். படம் நெடுக உதிரி பாகங்களுக்காக அலைகிறார். ஒவ்வொரு பாகமாகக் கிடைக்கிறது. புல்லட் முழுவதுமாக தயாராகும்போது, படம் உச்சகட்டத்தை எட்டுகிறது. இது போன்ற ரசிக்கத்தக்க காட்சிகள் படம் நெடுக இருக்கின்றன.
 
எப்போதுமே நீதியின் பக்கம் நிற்கும் விக்ரமே கதையின் நாயகனைப்போலத் தோன்றினாலும், படம் நகர நகர படத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்கிறது வேதாவின் பாத்திரம். அந்தப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜய் சேதுபதி. கையில் ஒரு வடையை வைத்தபடி மிக சாவதானமாக காவல்துறையிடம் சரணடையும் துவக்கக் காட்சியிலேயே படத்தின் கவனத்தை அவர் மீது திருப்பிவிடுகிறார். எங்கேயுமே உறுத்தலில்லாத, மிகை நடிப்பில்லாத விஜய் சேதுபதிக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும்.


 

 
விக்ரமாக வரும் மாதவன், நேர்மையான, புத்திசாலித்தனமான காவல்துறை அதிகாரியின் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமான தேர்வு. மாதவனுக்குப் பதிலாக வேறு யாரும் இந்தப் பாத்திரத்தைச் செய்திருந்தால் பொருத்தமாக இருக்குமா என்று தோன்ற வைக்கிறார்.
 
படத்தில் பெண் பாத்திரங்களாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் பாத்திரங்கள் சவாலானவையல்ல. தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். திரைக்கதைக்கு அடுத்தபடியாக இந்தப் படத்தின் மிக முக்கியமான பலங்கள், ஒளிப்பதிவும் பின்னணி இசையும். சற்றே இருண்மை படிந்த இந்தக் கதைக்கு உரிய நியாயத்தைச் செய்கிறது வினோத்தின் ஒளிப்பதிவு. அதேபோல சாமின் பின்னணி இசை, படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்துகிறது.
 
வெகு நாட்களுக்குப் பிறகு வசனங்களுக்குக் கைதட்ட வைத்திருக்கிறார்கள் புஷ்கரும் காயத்ரியும். முதல் பாதியிலும் பிற்பாதியிலும் பல தருணங்கள் மிக மெதுவாக நகர்வது, இரண்டாவது பாதியில் உள்ள பாடல் ஆகியவை படத்தின் பலவீனங்கள். ஆனால், அதையெல்லாம் மீறி ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த உணர்வை அளிக்கிறது விக்ரம் - வேதா.