வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 27 ஆகஸ்ட் 2016 (12:19 IST)

முதல் டி20 : முரட்டுக் காளைகளை அடக்குமா இந்திய அணி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று அமெரிக்காவின் லாடர்ஹில்-இல் உள்ள செண்ட்ரல் பிராவர்ட் மைதானத்தில் இன்று மாலை தொடங்குகிறது.
 

 
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றிய தெம்போடு களம் இறங்குகிறது. கேப்டன் தோனி நீண்ட நாள் ஓய்விற்கு பின்பு இன்று மீண்டும் புத்துணர்ச்சியோடு களம் காண உள்ளார்.
 
தோனி தவிர ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா என பலமான பேட்டிங் வரிசை உள்ளது. அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியின் பலவீனமாக கருதப்படுவது சுழற்பந்தை எதிர்கொள்வதுதான். அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சுழலில் அஸ்வின், அமித் மிஸ்ரா, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் உள்ளனர்.
 
ஆனால், இந்த மிரட்டல்களை சமாளிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டன் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் தயாராகவே உள்ளது. கிறிஸ் கெய்ல், பிராவோ, பிராத்வெய்ட், மாரன் சாமுவேல்ஸ், ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ ரஸ்ஸல், கீரன் பொல்லார்ச் என பெரிய பட்டாளமே உள்ளது.
 
பந்துவீச்சிலும் சுனில் நரைன், பத்ரி, ரஸ்ஸல் போன்றோரும் உள்ளனர். இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
அமெரிக்கா நாட்டிலும் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்காக இந்த போட்டி அங்கு நடத்தப்படுகிறது. இந்திய அணி முதன்முறையாக அமெரிக்காவில் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.