திங்கள், 25 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

உலகின் மிகப் பெரிய மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோவில்

மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோவிலாக உள்ளது. இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

 
இந்தக் குகைக்கோவிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் பெயரிலிருந்து பத்துமலை எனும் சொல் உருவாகியுள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.
 
மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல் மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்பக்தர்  ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப்  பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள். தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன்  பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்து இறைபணிகளுக்காகவும்  செலவழித்தார். இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார்.
 
ஆரம்பக் காலத்தில் முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில்  இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய
சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.
 
கோவிலின் நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப்பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முருகன் சிலைக்கு 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டது. மிகப்பெரிய  வேல் வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09  அடி கொண்டது. இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. 
 
சிறப்புகள்:
 
மலாய்க்காரர்கள் எனப்படும் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வழிபடுவதில்லை என்றாலும் இக்கோவிலையும், இங்குள்ள மிகப்பெரிய முருகன் சிலையையும் சுற்றுலாவாக வந்து பார்த்து வியந்து செல்கின்றனர்.
 
உலகின் மிகப் பெரிய முருகன் சிலை கோவிலை தமிழ்நாட்டை சேர்ந்த சிற்பி உருவாக்கம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நம் தமிழர்கள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் தமிழ் கடவுளான முருகனுக்கு அயல் நாடுகளிலும் ஆலயம் எழுப்பி பெருமை  சேர்த்துள்ளனர்.