வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : புதன், 17 மே 2017 (13:49 IST)

கை விட்ட மோடி ; கலங்கி நிற்கும் ஓ.பி.எஸ் - நடந்தது என்ன?

ஆளும் பாஜக அரசு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நெருக்கம் காட்டி வருவதால், ஓ.பி.எஸ் அணி கலக்கம் அடைந்திருப்பதாக செய்திகள் உலா வருகிறது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் அணி களம் இறங்கிய பின், அதிமுகவில் இரு அணிகள் ஏற்பட்டது. இதில், சசிகலாவும், தினகரனும் தற்போது சிறையில் இருக்கிறார்கள்.  
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணையும் சூழல் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரணை, சசிகலா குடும்பத்தினைரை கட்சியிலிருந்து நீக்குதல் என ஓ.பி.எஸ் அணி கறார் காட்ட, இதுவெல்லாம் முடியாது என எடப்பாடி அணி கை விரித்து விட்டது. எனவே, இரு அணியும் இணைவது சாத்தியமில்லாத சூழல் ஏற்பட்டது. ஒருபக்கம் ஓ.பி.எஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். 
 
ஆனால், தற்போது ஓ.பி.எஸ் அணியினர் மீதான செல்வாக்கு மக்களிடையே படிப்படியாக குறைந்து வருவதால், தங்கள் முக்கிய கோரிக்கைகளை விட்டுத்தர ஓ.பி.எஸ் அணி முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனாலும், ஓ.பி.எஸ்-ற்கு கொடுக்க முடிவு செய்திருந்த நிதியமைச்சர் பதவியை கூட தரமுடியாது என எடப்பாடி அணி தற்போது கை விரித்து விட்டது. 


 
மேலும், வருமான வரி சோதனைகளை கண்டு மிரண்டு போன எடப்படி அரசு ஆளும் பாஜக அரசிற்கு இணக்கமாக தற்போது செயல்பட்டு வருகிறது. பாஜக அரசை விமர்ச்சிக்க வேண்டாம் அமைச்சர்களுக்கு பழனிச்சாமி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.  
 
மத்திய அரசை பொறுத்தவரை அவர்களுக்கு ஓ.பி.எஸ்-ஸும் ஒன்றுதான், எடப்பாடியும் ஒன்றுதான். சசிகலா குடும்பதினர் உள்ளே வரக்கூடாது என்பதில்தான் அவர்கள் உறுதியாய் இருக்கிறார்கள். இனிமேல் சசிகலா குடும்பத்தினர் கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களில் தலையிட மாட்டார்கள் என மத்திய அரசிடம் எடப்பாடி வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. எனவே, அவர்கள் தற்போது ஓ.பி.எஸ்-ஐ கைவிட்டு எடப்பாடியை ஆதரிக்க தொடங்கிவிட்டனர். இது ஓ.பி.எஸ் தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக டெல்லி தலைவர்களிடம் பேசினால், இருவரும் சுமூகமாக ஒன்றிணைந்து செயல்படுங்கள் என பதில் வந்ததாம். இது எடப்பாடி தரப்பிற்கு மகிழ்ச்சியையும், ஓ.பி.எஸ் அணிக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம். மத்திய அரசு கொடுத்த நம்பிக்கையின் பேரிலேயே தற்போது அதிமுக அமைச்சர்கள் உற்சாகத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் ஓ.பி.எஸ் அணி விழி பிதுங்கி நிற்கிறார்கள் எனக்கூறப்படுகிறது.